நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி அதிரடி கைது

நவால்னியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காட்சி

கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி. இவர் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது மயங்கி விழுந்தார். உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றார். அலெக்சியை கொலை செய்ய அவர் குடித்த டீயில் விஷம் கலந்திருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ரஷியாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டு தலைநகர் பெர்லினில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்க பிறகு அவரது உடல்நிலை தேறியது.

இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் நவால்னி நேற்று ஜெர்மனியில் இருந்து ரஷியாவிற்கு புறப்பட்டார். ரஷியா வந்தால் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தும், அவர் விமானத்தில் புறப்பட்டு வந்தார். அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் மாஸ்கோ விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அவர் ஜெரெமெட்வோ விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் விமான நிலைய போலீசாரால் சிறைப்பிடிக்கப்பட்டார். விமான நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் சோதனை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவால்னி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நவால்னியின் கைது பற்றிய செய்தி வெளியானதும், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நவால்னியை அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது குறித்து வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரஷியாவை ஜெர்மனி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

நோவிசோக் நச்சுப்பொருளை பயன்படுத்தி, அலெக்சியை கொலை செய்ய முயற்சி நடந்ததை பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

malaimalar