அமெரிக்க ஆட்சி அதிகாரத்தில் கமலா ஹாரிசுக்கு முக்கிய பங்கு

வாஷிங்டன் : ‘அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, ஜோ பைடனின் நிர்வாகத்தில், அனைத்து முக்கிய முடிவுகளிலும், துணை அதிபர் கமலா ஹாரிசின் பங்கு நிச்சயம் இருக்கும்’ என, அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபராக, இந்திய – ஆப்ரிக்க வம்சாவளியான, கமலா ஹாரிசும், நாளை பதவி ஏற்கின்றனர். இதன் வாயிலாக, அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், என்ற பெருமையை, கமலா ஹாரிஸ் பெறுகிறார்.

ஜோ பைடன் ஆட்சி நிர்வாகத்தில், துணை அதிபருக்கு வழங்கப் படவுள்ள பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து, கமலா ஹாரிசின் தலைமை செய்தி தொடர்பாளர் சிமோன் சாண்டர்ஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியில், துணை அதிபருக்கு வழங்கப்படவுள்ள பொறுப்புகள் குறித்து, விரிவான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனாலும், அதிபரின் அனைத்து முக்கிய முடிவுகளிலும், கமலா ஹாரிசின் பங்கு, நிச்சயம் இருக்கும்.

சில முக்கிய பொறுப்புக்களை, கமலா ஹாரிஸ் கையாள வேண்டும் என்பது, ஜோ பைடனின் விருப்பமாக இருக்கும். அதே நேரத்தில், அனைத்து விவகாரங்களிலும், ஹாரிசின் கருத்து மற்றும் ஆலோசனைகளை பெற்று, இருவரும் இணைந்தே செயல்படுவர்.

வீழ்ச்சி அடைந்துள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பது, கொரோனா பரவலை கட்டுப் படுத்துவது, பருவ நிலை மாற்றம் மற்றும் இனவெறி தாக்குதல்களுக்கு முடிவுகட்டுவது போன்ற பல முக்கிய பிரச்னைகளில், கமலாவின் பங்கு நிச்சயம் இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்

dinamalar