உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றும் ஐ.நா. அமைப்புகள்

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கி இருப்பதால், இந்தியாவுடன் ஐ.நா. அமைப்புகள் நெருக்கமாக பணியாற்றுகின்றன.

நியூயார்க், இந்தியாவில் ஒரே நாளில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ந் தேதி தொடங்கி வைத்தார். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்காக இந்தியாவுடன் ஐ.நா.சபையின் பல்வேறு அமைப்புகள் நெருங்கி பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உறைவிட ஒருங்கிணைப்பாளர் ரெனாட்டா டெசாலியன் தலைமையிலான ஐ.நா. குழு, இந்தியாவில் பிரமாண்டமான கொரோனா தடுப்பசி திட்டத்தையும், பிரமாண்டமான கொரோனா தடுப்பூசி திட்டத்தின் ஐ.நா. பங்குதாரர்களையும் ஆதரிக்கிறது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்சின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் குறிப்பிடும்போது, தற்போது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து, தொடங்குவதற்கு ஐ.நா. அமைப்புகள் நெருக்கமாக பணியாற்றி உள்ளன. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நிலபரப்படி ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

4000-க்கும் மேற்பட்ட தடுப்பூசி அமர்வுகளை ஐ.நா. குழுக்கள் கண்காணித்து வருகின்றன. 3 லட்சம் தடுப்பூசி செலுத்துனர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்க உதவியும் உள்ளன. நாங்கள் தொழில்நுட்ப உதவிகளையும் அளித்து வருகிறோம். குறிப்பாக தடுப்பூசிகளின் குளிர்சங்கிலி உபகரணங்களை உறுதிப்படுத்த உதவுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போன்று உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ ஆப்ரின் கருத்து தெரிவிக்கையில், தடுப்பூசிகளுக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் பிற பயிற்சிப்பொருட்களை மேம்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் தொழில்நுட்ப உதவியை அளித்துள்ளது என கூறினார்.

யுனிசெப் அமைப்பு, தகவல் தொடர்பு மற்றும் தடுப்பூசி ஆதரவு முயற்சிகளை ஆதரித்து உள்ளது. இது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு தடுப்பூசிகளைப் பற்றிய உண்மை தகவல் பரவ துணை நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

dailythanthi