மருத்துவமனை மீதான அதிருப்தியால் முதியவர் நடத்திய துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு

அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து முதியவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலம், பஃபலோ நகரில் உள்ள அல்லினா என்ற மருத்துவமனை நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த முதியவர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பதற்றத்தில் சிதறி வெளியே ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து மருத்துவமனையை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்தியவரின் பெயர் கிரிகோரி பால் அல்ரிச் (வயது 67) என்பது தெரியவந்தது. மருத்துவமனை அளித்த சிகிச்சை அவருக்கு திருப்தி அளிக்காததால் இப்படி நடந்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி காவல்துறை தலைவர் பாட் பட்கே கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவம் மிகவும் வேதனை தருகிறது. மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கான சரியான நோக்கம் தெரியவிலை. ஆனால், தாக்குதல் நடத்திய நபர், இப்பகுதியில் உள்ள பல மருத்துவமனைகளில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியில்லை என பிரச்சனை செய்துள்ளார். இது பல ஆண்டுகளாக நடந்துள்ளது. எனவே, நிச்சயமாக அவர் சுகாதாரப் பாதுகாப்பில் அதிருப்தி அடைந்திருப்பது தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இது உள்நாட்டு பயங்கரவாதம் போன்று தோன்றவில்லை’ என்றார்.

மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஜன்னல் கதவுகள் உடைந்த சத்தம் கேட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அங்கு போலீசாரும் அதிகாரிகளும் சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கிடமான சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் தங்கியிருந்த ஓட்டலிலும் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

malaimalar