மக்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மியான்மர் ராணுவம் கடுமையான விளைவுகளை சந்திக்கும் ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை.
நேபிடாவ், மியான்மரில் கடந்த 1ந் தேதி, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை அந்த நாட்டு ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறை வைத்தது. அதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் நேபிடாவ், யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் ராணுவ ஆட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளதால் போராட்டத்தை ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மியான்மர் ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் பாதுகாப்பு படைகள் தங்களது கடமையை செய்வதற்கு தடையாக இருக்கும் மக்கள் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என ராணுவம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதற்கு கடுமையான விளைவுகள் இருக்கும் என மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஐநாவின் சிறப்பு தூதர் கிறிஸ்டின் ஷிரானர் புர்கெனர் கூறுகையில் “அமைதியான போராட்டத்தின் உரிமை முழுமையாக மதிக்கப்பட வேண்டும். எனவே மக்களின் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நினைத்தால் மியான்மர் ராணுவம் கடுமையான விளைவுகளை சந்திக்கும்” என கூறினார்.
dailythanthi