வருகிற நாட்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதுமானது என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
பீஜிங்: உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவும் 2 தடுப்பூசிகளை முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போட்டு வருகிறது.
அதேநேரம் பல நாடுகள் இன்னும் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடு களை அமலில் வைத்து உள்ளன. அதைப்போல சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களும் பின்பற்றி வருகின்றனர்.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வந்துள்ள நிலையில் வருகிற நாட்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிகைகள் குறித்து இங்கிலாந்தின் சவுதாம்டன் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங்கில் உள்ள சீன பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இது தொடர்பாக சீனாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த, குறைவான பல்வேறு நகரங்களில் அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், உடல் ரீதியான தூரத்தின் தாக்கம், மக்கள் அடர்த்தி மற்றும் புவியியல் பகுதிகள் மற்றும் நாள் முழுவதும் தடுப்பூசிகள் கிடைப்பதைப் பொறுத்து கொரோனாவின் எதிர்கால பரவலின் வேகம் இருக்கும் என கண்டறியப்பட்டு உள்ளது.
அதாவது இந்த காரணிகளுக்கு இடையே மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
அந்தவகையில் பெரும்பாலான நகரங்களில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வீரியமான தடுப்பூசி திட்டங்கள் மற்றும் சமூக இடைவெளி ஆகியவையே போதுமானது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை தேவையற்றது என அவர்கள் கூறியுள்ளனர்.
குறைந்த பரிமாற்ற வீதத்தை பராமரிப்பது அல்லது ‘ஆர்’ எண்ணை ஒன்றுக்கு கீழே (ஒரு பாதிக்கப்பட்ட நபர் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் பரவாது) பராமரிப்பதன் மூலம் பரவல் கட்டுப்படுத்த முடியும் என வரையறுக்கப்பட்டு உள்ளது.
நடுத்தர மற்றும் அதிகமக்கள் அடர்த்தி கொண்ட நகரங்களில் மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை தடுப்பூசியும், சமூக இடைவெளியும் அவசியம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதேநேரம் குறைவான மக்கள்தொகை நகரங்களில் வீரியமிக்க தடுப்பூசியே போதும் என அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அனைத்து நகரங்களிலும் முற்றிலும் ஊரடங்கு முறை இனியும் தேவையில்லை எனக்கூறியுள்ள ஆய்வாளர்கள், குறுகிய கால சமூக இடைவெளி பின்பற்றும் நடவடிக்கை, லேசான மற்றும் நீண்டகால நடவடிக்கையை விட சிறந்தது எனவும் கூறியுள்ளனர்.
கொரோனா பரவலை காலப்போக்கில் கட்டுக்குள் வைப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கையை அடையாளம் காண்பதற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
malaimalar