அமெரிக்காவில் போயிங் 777 விமான சேவை நிறுத்தம்

அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெனவர் நகரில் இருந்து ஹோனாலுலு நகருக்கு 231 பயணிகளுடன் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் விமானத்தின் என்ஜின் பாகங்கள் ஒவ்வொன்றாக உடைந்து விழுந்தன. இதனையடுத்து விமானம் உடனடியாக டெனவர் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.‌ அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 விமானங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களிடம் உள்ள அனைத்து போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே போயிங் 777 விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதைப்போல் ஜப்பானைச் சேர்ந்த 2 விமான நிறுவனங்களும் தென் கொரியாவின் தென்கொரியா ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் 777 விமானங்களின் சேவையை அதிகமாக நிறுத்தியுள்ளன.‌

இதையடுத்து உலகம் முழுவதும் பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 விமானங்களின் சேவையை உடனடியாக நிறுத்தும்படி போயிங் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது

malaimalar