இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன்?

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முதல் முன்னுரிமை பங்குதாரராக செயற்படும் என கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவிக்கின்றது.

கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில் இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு (மாலத்தீவு) ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கலந்துரையாடல்களுக்காக வருகைத் தந்த போதே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை விமானப்படை தனது 70வது நிறைவு ஆண்டை எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

இதனை முன்னிட்டு ‘ஃபிளை ஃபாஸ்ட்’ மற்றும் ‘ஏரோபாட்டிக் டிஸ்ப்ளே’ உள்ளிட்ட நிகழ்வுகளும் மார்ச் மாதம் 03ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 05ம் தேதி வரை கொழும்பு – காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு சொந்தமான 23 விமானங்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏரோபாட்டிக் டிஸ்ப்ளே கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் மற்றும் சி-130 ஜே போக்குவரத்து விமானங்கள் இலங்கைக்கு பிப்ரவரி 27 அன்று வருகை தந்துள்ளன.

கண்காட்சிக்காக வைக்கப்படவுள்ள இந்திய விமானங்கள் அனைத்தும், இந்தியாவினால் தயாரிக்கப்பட்டவை. இந்திய ஆராய்ச்சியின் ஊடாக உள்நாட்டு தொழில்நுட்பத்தின் பங்களிப்பு செய்யப்பட்டவை மற்றும் இந்திய பாதுகாப்பு துறையினால் தயாரிக்கப்பட்டவை.

தேஜாஸ் ட்ரெய்னா முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் கொண்டாட்டங்களில் இந்திய விமானப்படை பங்கேற்கின்றது.

இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை குறித்து நிற்பதாக இந்தியத் தூதரகம் தெரிவிக்கின்றது.

தகவல் BBC