நாட்டின் நீதித்துறை செயல்படும் விதம் தொடர்பில் தமக்கு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களாக உச்ச நீதிமன்றத்தால் பெயரிடப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத பின்னணியிலேயே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேலும் ஆராய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர்த்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொருட்படுத்ததாது இலங்கை அரசாங்கம் செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பல தீர்ப்புக்களுக்கான சட்ட நடவடிக்கைகள் அப்போதைய அரசாங்கங்களால் எடுக்கப்படவில்லை எனவும், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மதிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் மாத்திரமின்றி அனைத்து நாடுகளிலும் நீதியை மதிக்கும் கலாச்சாரம் இருக்க வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.
-ib