இயேசு போதித்த உயரிய குணங்களை மக்கள் பின்பற்ற வேண்டும்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இயேசு போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஏழைகள், எளிய மனத்தோர் மற்றும் கைவிடப்பட்டோரை அரவணைத்து மானிட இனம் நல்வழியில் வாழ, புதிய ஏற்பாடுகளை போதித்த இயேசு பெருமான், தன் போதனைகளாலும், வாழ்ந்து காட்டிய நெறிகளாலும், நம் அனைவரின் வணக்கத்திற்குரியவராகத் திகழ்கிறார்.

எனது பார்வையில் இயேசு ஒரு சமூக புரட்சியாளர். மக்கள் மத்தியில் விடுதலையை விதைத்தவர். இயேசு கிறிஸ்து தன் பிறப்பின் ஊடாக கொண்டுவந்த விடுதலை மற்றும் மீட்பை அனைவரும் உணர்ந்து அனுபவிப்பதே உண்மையான மகிழ்ச்சி.

ஆகவே இந்த நத்தார் விழாவானது துன்பங்கள், துயரங்கள், வறுமை, இயற்கையின் இடர்கள் மற்றும் நோய்கள் போன்ற அனைத்திலிருந்தும் அனைவருக்கும் விடுதலை தருவதாக அமைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திக்கின்றோம்.

இயேசுவின் கட்டளைகளையும், போதனைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியான வழியில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் எல்லோருடைய அன்பையும், ஆதரவையும் பெற்று வாழ வேண்டும்.

எமது நாட்டில் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் நிலை உருவாக வேண்டும். அதற்காக ஒன்றுபடுவோம். நாட்டின் தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் இருந்து முழுமையாக மீளவும் நாம் ஒன்றுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.

 

 

-tw