‘வெளிநாட்டில் இருந்தாலும், துணையமைச்சர் தனது பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்’

கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் நியூசிலாந்தில் இருப்பதால், கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் பணியாற்றவில்லை என்றக் கருத்தை எட்மண்ட் சந்தரா குமாரின் அதிகாரி மறுத்துள்ளார்.

சந்தாராவின் சிறப்பு அதிகாரி மு இராஜா, வெளிநாட்டில் இருந்தாலும் அவர் ஒவ்வொரு நாளும் தனது அதிகாரிகளின் கடமைகளைக் கண்காணிக்கிறார் என்று கூறினார்.

“ஒவ்வொரு நாளும், அனைத்து அதிகாரிகளும் தினசரி மாலை 5 மணிக்கு ஓர் அறிக்கையை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தினசரி செய்ய வேண்டியப் பணி பட்டியலைக் கண்காணிக்க அவர் ஒவ்வொரு நாளும் எங்களைத் தொடர்புகொள்வார்.

“அதுமட்டுமின்றி, அமைச்சுகள் மற்றும் அரசாங்கம் தொடர்பான பிரச்சினைகள், அவரே நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்கிறார்.

“எனவே, அவர் வேலை செய்யவில்லை என்ற சில தரப்பினரின்  குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன்,” என்று அவர் கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தற்போது நியூசிலாந்தில் உள்ள சந்தாரா, துணை அமைச்சராகவும் மக்கள் பிரதிநிதியாகவும் “வேலை செய்யவில்லை” என்ற போதிலும் தனது சம்பளத்தை இன்னும் பெறுகிறார் என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார்.

இராஜாவின் கூற்றுப்படி, டிசம்பர் முதல், சந்தாரா பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார், குறிப்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் இலவச முகக்கவரிகளை வழங்கியதோடு, அனைத்து பள்ளிகளையும் இலவசமாக துப்புரவு செய்யவும் (கிருமினாசினி) உதவியுள்ளார்.

“மித்ரா (மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு) உடனான அந்த ஒத்துழைப்பு திட்டத்தில், நாடு முழுவதும் 80,757 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

“துணை அமைச்சருக்கான அதிகாரிகளான நாங்கள், எப்போதும் அமைச்சரால் வழங்கப்படும் கடமைகளைச் செய்வதற்காக லாபுவான், புத்ராஜெயா உள்ளிட்ட கூட்டரசுப் பிரதேசங்களில் களத்தில் இறங்குகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.