வாஷிங்டன் : ‘குவாட்’ எனப்படும், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய, நான்கு நாடுகளின் கூட்டமைப்பின், தலைவர்கள் மாநாடு, நாளை நடக்கிறது. இதில், அமெரிக்க அதிபர், ஜோ பைடன் உள்ளிட்டோருடன், நம் பிரதமர், நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
கடந்த, 2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு பின் பேசப்பட்டு, 2007ல், முறைப்படி உருவானது, குவாட் அமைப்பு. இதுவரை, வெளியுறவு அமைச்சர்கள், அதிகாரிகள் அளவில், பல்வேறு பிரச்னைகளுக்காக குவாட் மாநாடு நடந்துள்ளது.முதல் முறையாக, இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, நாளை நடக்க உள்ளது.’வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர், ஜோ பைடன், நம் பிரதமர், நரேந்திர மோடி, ஆஸ்தி ரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர், யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இது குறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், ஜென் பசாகி கூறியதாவது:கடல் பகுதி உரிமை தொடர்பாக, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டாலும், பல்வேறு விஷயங்கள் குறித்து, இந்த மாநாட்டில் விவாதிக்கப் படும்.குறிப்பாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார பிரச்னை, பருவநிலை மாறுபாடு என, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து, இதில் விவாதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியா புரிந்திருக்கும் அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுக்கான நிலைக் குழு கூட்டத்தில், அமெரிக்க ராணுவத்தின் முக்கிய படை தளபதி, அட்மிரல் பில் டேவிட்சன் கூறியுள்ளதாவது:சீனாவுடன், எல்லையில் ஏற்பட்ட பிரச்னை, இந்தியாவின் கண்ணை திறந்து வைத்துள்ளது. ராணுவம் தொடர்பான பிரச்னைகளில் மற்ற நாடுகளின் உதவியும், ஒத்துழைப்பும் தேவை என்பதை, இந்தியா புரிந்திருக்கும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
dinamalar