தடுப்பூசி போடும் பணி
கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டதை விட ஆன்டிபாடி அளவுகள் மிக அதிகமாக இருந்தாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோதிலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே இன்னும் தயக்கம் அதிகமாக உள்ளது. தடுப்பூசிகளின் பலன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
அவ்வகையில், பைசர் பயோன்டெக் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் தொடர்பான அமெரிக்க பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பைசர் பயோன்டெக் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு மருந்துகளும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தாய்மார்கள் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஆன்டிபாடிகள் சென்று பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை, பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை மற்றும் எம்.ஜி.எச், எம்.ஐ.டி மற்றும் ஹார்வர்டின் ராகன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 131 பெண்களுக்கு ஃபைசர், பயோன்டெக் அல்லது மாடர்னா தடுப்பூசி போடப்பட்டது. இவர்களில் 84 பேர் கர்ப்பமாக இருந்தனர், 31 பேர் பாலூட்டும் தாய்மார்கள். 16 பேர் கர்ப்பமாக இல்லை. அவர்களின் மாதிரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி வரை சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசியால் தூண்டப்பட்ட ஆன்டிபாடியின் அளவுகள் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு சமமாக இருந்தன. கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டதை விட ஆன்டிபாடி அளவுகள் மிக அதிகமாக இருந்தாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். இந்த இரண்டு தடுப்பூசிகளும் பெண்களில் நம்பமுடியாத அளவிற்கு திறம்பட செயல்படுவதாக தெரிகிறது என்றும் தெரிவித்தனர்.
maalaimalar