50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்- அபுதாபி சுகாதார சேவைத்துறை அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி

பொதுமக்கள் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியானது வீடுகளுக்கு சென்று போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி: அபுதாபி சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தடுப்பூசி போடுவதை மேலும் மேம்படுத்தும் விதமாக, அபுதாபியில் வசித்து வரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் 80050 என்ற எண்ணை அழைத்து முன்பதிவு செய்து தங்கள் வீட்டிலேயே தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.

ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்கள் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசி போடும் பணியானது வீடுகளுக்கு சென்று போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே அமீரகத்தில் தான் தடுப்பூசி போடும் பணியானது வேகமாக செயல்பட்டு வருகிறது. அமீரகத்தில் இதுவரை 78.16 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமீரகம் முழுவதும் இந்த பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட முன்வர வேண்டும். இது குறித்து எந்தவிதமான ஐயமும் அடைய தேவையில்லை.

இந்த தடுப்பூசி போடும் பணி, பட்டத்து இளவரசர் அலுவலகம், தியாகிகள் குடும்ப விவகாரத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

maalaimalar