ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு -வலுக்கும் கண்டனம்

போராட்டம்

ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்: சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாங்காங் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. ஹாங்காங் ஜனநாயக செயல்பாட்டாளர்கள் தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஹாங்காங் வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக 2019 ஆம் ஆண்டு போராட்டம் கருதப்படுகிறது. போராட்டங்களை தொடர்ந்து ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாங்காங் போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக ஜனநாயக ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஹாங்காங்கின் பிரபல செய்தி நாளிதழான ’ஆப்பிள் டெய்லி’ நிறுவனர் ஜிம்மி லேய் மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் அடக்கம். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோதமாக போராட்டங்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஹாங்காங் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தை சட்டவிரோதமாக ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என ஹாங்காங் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங் ஜனநாயக செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

maalaimalar