இந்தோனேஷியா நிலச்சரிவு பலி 55 ஆக உயர்வு

ஜாகர்தா : இந்தோனேஷியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை, 55 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறிஉள்ளனர். தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவில், கிழக்கு நுசா டென்கரா மாகாணம் தொடர் மழை, வெள்ளம் காரணமாக, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள, அடோனரா தீவில், நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுற்றிலும் உள்ள குன்றுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், லமிநிலி என்ற கிராமத்தில் இருந்த ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.மீட்பு படையினர், மண்ணில் புதையுண்ட, 38 உடல்களை மீட்டனர். படுகாயம் அடைந்த ஐந்து பேர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை, வெள்ளத்தில், ஒயாங் பயாங் கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.காட்டாறு போல பாய்ந்த வெள்ளம், பலரை வாரிச் சுருட்டி இழுத்துச் சென்றதாக உயிர் தப்பியோர் தெரிவித்துள்ளனர். கிழக்கு புளோரஸ் மாவட்டத்தில், வெள்ள நீர், ஆற்றின் கரையை உடைத்து, வைபுராக் என்ற கிராமத்திற்குள் புகுந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். காணாமல் போன ஏழு பேரை, மீட்பு படையினர் தேடி வருகின்றனர். எரிமலைலெம்பாடா தீவில், லி லெவோடோலக் எரிமலையின் தீக்குழம்பில் சிக்கி உயிரிழந்த, 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இது தவிர, 16 பேர் பலியாகியிருப்பர் என, அஞ்சப்படுகிறது. மழை, வெள்ளம், நிலச்சரிவில், ஆறு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிமா நகரில், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களில் தஞ்சமைடந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணி, தீவிரமாக நடக்கிறது. ‘இதுவரை, 55 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேரை காணவில்லை’ என, தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

dinamalar