இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் கெடு

பெஞ்சமின் நேட்டன்யாஹூ

இஸ்ரேலில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஒரு நிலையான அரசை அமைக்க முடியாத சூழலில் கடந்த மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.

இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் கெடு

ஜெருசலேம்: இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஒரு நிலையான அரசை அமைக்க முடியாத சூழலில் கடந்த மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.

இதில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்கிற நிலையில் அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதேபோல் நேட்டன்யாஹூவுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு அந்த நாட்டின் அதிபர் ருவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் புதிய அரசை அமைப்பதற்கு நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் காலக்கெடு விதித்துள்ளார்.

இந்த காலக்கெடுவுக்குள் நேட்டன்யாஹூ ஆட்சியமைக்க தவறும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உள்ளது என உரிமை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆட்சி அமைக்க அதிபர் ருவன் ரிவ்லின் அழைப்பார்.

அப்படி யாரும் உரிமை கோரவில்லை என்றால் மீண்டும் பொது தேர்தலை நடத்த அதிபர் ருவன் ரிவ்லின் உத்தரவிடுவார்.

maalaimalar