“ஆவி” வாக்காளர்கள்: எம்பி-க்கு எதிராக உள்துறை அமைச்சு போலீஸ் புகார்

சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கான 6பி பொது மன்னிப்புத் திட்டம் மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக பிகேஆர் அம்பாங் எம்பி சுராய்டா கமாருதினுக்கு எதிராக உள்துறை அமைச்சு இன்று போலீஸில் புகார் செய்துள்ளது.

சிலாங்கூர் குடி நுழைவுத்துறை ஷா அலாம் செக்சன் 11 போலீஸ் நிலையத்தில் அந்தப் புகாரைச் சமர்பித்துள்ளதாக உள்துறை துணை அமைச்சர் லீ சீ லியாங் கூறினார் “வெகு விரைவில்” அவதூறு வழக்கு தொடரும் என்றார் அவர்.

“நாங்கள் அந்த வழக்கைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். `அது போலீஸ் புலனாய்வுடன் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்படும்.”

ஆதாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் சுராய்டாவுக்கு கால அவகாசம் வழங்கியது என்றும் ஆனால் அவர் அதனைச் செய்யத் தவறி விட்டார் என்றும் லீ, புத்ராஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

என்றாலும் அந்த மன்னிப்புத் திட்டத்தில் பங்கு கொள்வதற்கு பிஎன்-னுக்கு விசுவாசம் தெரிவிக்குமாறு சில குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த எம்பி கூறிக் கொண்டுள்ளது பற்றி இன்னும் அமைச்சு விசாரிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

“ஆதாரம் ஏதுமில்லாமல் நாங்கள் விசாரிக்க முடியாது?” என லீ குறிப்பிட்டார்.

உள்துறை அமைச்சு நியமித்துள்ள முகவர்கள் யாரும் அத்தகைய நிபந்தனைகளை விதிக்கவில்லை என்பது அவருக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும் என அவரிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த அவர்,” எங்களுக்குத் தெரிந்த வரை அது போன்று எதுவும் இல்லை. நாங்கள் அது போன்ற நிபந்தனையை நிர்ணயிக்கவில்லை.”

சுராய்டா விடுத்த குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு எதிரானவை என்பது மிகத் தெளிவானது எனக் கூறிய லீ, அதனால் அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

“அது தவறான குற்றச்சாட்டு. நாங்கள் ஆதாரத்தைக் கொடுக்குமாறு நாங்கள் அவரைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டோம். ஆனால் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆகவே நாங்கள் புகார் செய்தோம்.”

அந்த நடவடிக்கை “அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்கிறது, நாட்டின் ஆட்சியுரிமையை நிலை நிறுத்துவதில் எதனையும் விட்டுக் கொடுக்காது என்பதற்கு ஆதாரம்” என்றும் அவர் சொன்னார்.

“எதிர்க்கட்சிகளின் கறை படிந்த அரசியலுக்கு பலியாக வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.”

பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவியுமான சுராய்டா, பொது மன்னிப்புத் திட்டம் ஆவி வாக்காளர்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாக கடந்த வாரம் கூறிக் கொண்டிருந்தார்.

பொது மன்னிப்பு பதிவு மையங்களில் பிகேஆர் “துப்பறிந்ததாகவும் பிஎன்-னுக்கு விசுவாசம் தெரிவிக்கும் வாசகத்தை படிக்குமாறு சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் கட்டாயப்படுத்தப்படுவதைக் கண்டு பிடித்ததாகவும் அவர் சொன்னார்.

தாம் எல்லா ஆதாரங்களையும் திரட்டி விட்டதாகவும் இந்த வாரத்துக்குள் போலீசாரிடம் அவற்றை ஒப்படைக்கப் போவதாகவும் சுராய்டா இன்று கூறிக் கொண்டார்.

TAGS: