பிரேசிலில் ஒரே நாளில் 4,195 பேர் கொரோனாவுக்கு பலி

பிரேசிலில் ஒரே நாளில் 4,195 பேர் கொரோனாவுக்கு பலி

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில் ஆகும்.

பிரேசிலியா: கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில். அங்கு கொரோனா பாதிப்பு 1½ கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார்.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக அங்கு கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இடம் இல்லாமல் ஆஸ்பத்திரியிலேயே உடல்களை கிடத்தி வைக்கும் அவல நிலையும் அங்கு உள்ளது.

இந்த நிலையில் பிரேசிலில் வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 195 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

இதனால் அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து கடந்துள்ளது.

ஆனால் இப்போதும் கூட அதிபர் ஜெயீர் போல்சனாரோ, கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரத்தின் சேதம் வைரசின் விளைவுகளை விட மோசமாக இருக்கும் என அவர் கூறுகிறார்.

maalaimalar