பாகிஸ்தான்: போராட்டக்காரர்களால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட போலீசார் விடுதலை

பாகிஸ்தானில் போராட்டக்காரர்களால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 11 போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

லாகூர், பிரான்ஸ் நாட்டில் வெளிவரும் சார்லி ஹேப்டோ பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளை அவமதிக்கும் வகையில் கேலிசித்திரம் வெளியிடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் சார்லி ஹேப்டோ பத்திரிக்கைக்கு ஆதராகவும், கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்தது. அதன் பின்னர் அந்த விவகாரம் சற்று தணிந்திருந்தது.

இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக் – இ – லப்பைக் பாகிஸ்தான் என்ற தீவிர வலதுசாரி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக சாத் ரிஸ்வி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு சார்பில் பாகிஸ்தான் நாட்டில் பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கியது.

இதையடுத்து, தெஹ்ரிக் – இ – லப்பைக் அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்தது. மேலும், அந்த அமைப்பின் தலைவரையும் கைது செய்தது.  இதனை தொட்ர்ந்து போராட்டம் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக மாறியது.

இந்த வன்முறையில் பல்வேறு பகுதிகளில் கடைகள், அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

வன்முறையை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வன்முறைக்காரர்களுக்கும் போலீசாருக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

முன்னதாக, லாகூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நேற்று போலீசார் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து போலீசார் 11 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். இதனால், அவர்களை மீட்க பாகிஸ்தான் அரசு தெஹ்ரிக் – இ – லப்பைக் பாகிஸ்தான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், பேச்சுவார்த்தையின் பயணாக தங்கள் பிடியில் பிணைக்கைதிகளாக இருந்த 11 போலீசாரையும் தெஹ்ரிக் – இ – லப்பைக் பாகிஸ்தான் அமைப்பினர் இன்று விடுதலை செய்தனர். பாகிஸ்தானில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அந்நாட்டு மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

dailythanthi