ஆய்வு : ஓராங் அஸ்லி சமூகம் அரசியல் ரீதியான தகவல்களை பெரிதும் நம்புவதில்லை

கிளந்தான், சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த சில ஓராங் அஸ்லி பழங்குடியினர், அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களில் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.

கிளந்தான், குவா மூசாங்கில் மூன்று குடியேற்றங்களை உள்ளடக்கிய ஒராங் அஸ்லி தெமியார் சமூகங்கள், சபாவில் உள்ள பிதாஸ் மற்றும் மெலங்காப் சமூகங்கள், சரவாக் கம்போங் லெபோர் மற்றும் நங்கா பெகாத்தான் ஆகிய சமூகங்கள் அவ்வாறு வாழ்வதாகச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டின் (ஐ.இ.ஏ) ஒரு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“72 விழுக்காட்டினர் (பதிலளித்தவர்கள்) அரசியல் தகவல்களை நம்பவில்லை. பெரும்பாலானவர்கள், பாரம்பரிய அல்லது புதிய ஊடகங்களில் வெளியாகும் அத்தகவல்களின் உள்ளடக்கம் ஒரு பக்கச் சார்புடையதாகக் கருதுகின்றனர்.

ஏப்ரல் 19 அன்று வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு அறிக்கையின்படி, “இந்தக் கருத்து அலட்சியத்திற்கு வழிவகுக்கிறது”.

சர்வதேச இன்டர்நியூஸ் அரசு சாற்பற்ற நிறுவனம் மற்றும் சுதந்திரப் பத்திரிகை மையம் (சி.ஐ.ஜே) ஆகியோரால், 2020 ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் இந்த சுற்றுச்சூழல் மதிப்பீடு நடைபெற்றது.

குவா மூசாங்கில், மூன்று தெமியார் சமூகங்களில் பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், பிரச்சாரம் மற்றும் அதிகச் சார்புநிலை காரணமாக, அரசியல் செய்திகள் மிகவும் நம்பமுடியாத உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

“ஆய்வில் பங்கேற்ற இளைஞர்களில் 80 விழுக்காட்டினர் அரசியல் குறித்த எந்தத் தகவலையும் நம்பவில்லை என்று கூறியுள்ளனர்.

“பதிலளித்தவர்களில் ஒரு பெண், அனைத்து அரசியல்வாதிகளும் சமம் என்று கூறினார்; அவர்களின் வார்த்தைகள் செயல்வடிவம் பெறாவிட்டால் அதில் எதுவும் இல்லை,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உண்மைக்கும் புனைவுக்கும் இடையில் வேறுபாடு காண்பது கடினம்’

மூன்று தெமியார் சமூகங்களிடையே அவநம்பிக்கையின் அளவு மிக அதிகமாக உள்ளது, பெரும்பாலான ஓராங் அஸ்லி இளைஞர்கள் மற்றும் பெண்கள் தாங்கள் பெறும் எந்தவொரு அரசியல் தகவலுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.

இதற்கிடையில், சபாவில் உள்ள மெலங்காப் மற்றும் பிதாஸ் பழங்குடியினரில், பதிலளித்த ஐந்து பேரில் நான்கு பேர், உண்மைக்கும் புனைகதைக்கும் வேறுபடுத்துவது கடினம் என்பதால் அரசியல் சம்பந்தப்பட்ட எந்தவொரு செய்தியையும் புறக்கணிக்க முனைவதாகக் கூறினர்.

“மேலும் கேட்டபோது, அரசியல்வாதிகளின் பெரும்பாலான வார்த்தைகள் வாக்குகளைப் பெறுவதற்கும் அனுதாபத்தைப் பெறுவதற்குமான மோசடிகள் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

“அதிகமான அரசியல் செய்திகள் இருப்பதால், உண்மைகளையும் போலி செய்திகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

“ஆகவே, பதிலளித்தவர்களில் பெரும்பாலானப் பெண்கள் அரசியல் செய்திகளையும் அரசியல் ஈடுபாடுகளையும் அதிகம் புறக்கணித்து, அதை ஆண்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள்,” என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதேபோல் சரவாகில், கம்போங் லெபோரிலும் நங்கா பெக்காத்தானிலும், 50 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் அரசியல் செய்திகளை நிராகரிக்கின்றனர். பெரும்பாலான தகவல்கள் தவறானவை என்று அவர்கள் கூறினர்.

இளைஞர்கள் தாங்கள் அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்றும், பெற்றோர்களால் ஆதரிக்கப்படும் எவருக்கும் வாக்களிப்பதாகவும் கூறினார்.