பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன் – 5 பேர் உயிரிழப்பு

தாக்குதல் நடந்த பள்ளி

பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் சிறுவன் புகுந்து பட்டா கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\

பிரேசிலில் மழலையர் பள்ளிக்குள் புகுந்து பட்டா கத்தியால் தாக்கிய சிறுவன் –  5 பேர் உயிரிழப்பு

பிரேசிலியா: பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் சவுடேட்ஸ் நகரில் உள்ள மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது 18 வயதான சிறுவன் ஒருவன் கையில் பட்டா கத்தியுடன் மழலையர் பள்ளிக்குள் நுழைந்தான்.‌ அவன் பள்ளியின் நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை கத்தியால் சரமாரியாக வெட்டினான். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.

ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சிறுவன் ரத்தம் படிந்த பட்டா கத்தியுடன் நிற்பதை கண்டு அவர்கள் திகைத்துப் போயினர். பின்னர் அவர்கள் வகுப்பறைகளில் உள்ள குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வகுப்பறைகளுக்குள் ஓடிச் சென்று கதவுகளை பூட்டி கொண்டனர்.

ஆனாலும் அந்த சிறுவன் ஒரு வகுப்பறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான்.பின்னர் அங்கிருந்த குழந்தைகளையும் ஆசிரியை ஒருவரையும் பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினான். இதில் 2 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும் ஒரு ஆசிரியையும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தன‌ர். மேலும் ஒரு குழந்தை பலத்த காயமடைந்தது.

இதற்கிடையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மழலையர் பள்ளியில் பட்டாக்கத்தி தாக்குதல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மலழையர் பள்ளியை சுற்றி வளைத்து தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்திய சிறுவனை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் சிறுவன் போலீசுக்கு பயந்து பட்டா கத்தியால் தன்னைத் தானே வெட்டிக் கொண்டான். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.

அதேபோல் இந்த பட்டாக்கத்தி தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு குழந்தையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம் தாக்குதல் நடத்திய சிறுவனின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

இதனிடையே மழலையர் பள்ளியில் நடந்த இந்த கோர சம்பவத்துக்காக சாண்டா கேடரினா மாகாணத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மாகாண அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மர்மநபர்கள் 2 பேர் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 மாணவர்கள், ஒரு ஆசிரியை மற்றும் பள்ளி நிர்வாக ஊழியர் ஒருவர் என 7 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

maalaimalar