உலக வர்த்தக அமைப்பு விவகாரம்: இந்தியாவுக்கு 100 அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது.

இந்த தருணத்தில் உலக வர்த்தக அமைப்பு, அறிவுசார் சொத்துரிமை விதிகளில், வர்த்தகம் தொடர்பான சில அம்சங்களை தற்காலிமாக நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் முன்னெடுத்துள்ளன. இதே கோரிக்கையை வேறு சில நாடுகளும் முன்வைத்துள்ளன.ஆனால் இதை அமெரிக்காவில் எதிர்க்கட்சியாக உள்ள குடியரசு கட்சி எம்.பி.க்கள் 12 பேர் எதிர்க்கிறார்கள்.

இந்த விஷயத்தில் உலக வர்த்தக அமைப்பில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கக்கூடாது என்று அவர்கள் ஜோ பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக ஜிம் ஜோர்டான், டாரல் இஸா உள்ளிட்ட எம்.பி.க்கள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேதரின் டாய்க்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள், “அமெரிக்கா அறிவுசார் சொத்துரிமைகளை விட்டுக்கொடுத்தால் அது புதிய கண்டுபிடிப்புகளுக்கும், உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக குறைவான எண்ணிக்கையிலானவர்கள்தான் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள்” என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜனநாயக கட்சியை சேர்ந்த 100 எம்.பி.க்கள் இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

அது மட்டுமின்றி அவர்கள் இலவச தடுப்பூசி பிரசாரம் என்ற இயக்கத்தையும் தொடங்கினர். இதுதொடர்பாக லாயிட் டாக்கெட் எம்.பி. கூறுகையில், “நாம் இப்போது செயல்படாவிட்டால், இந்தியாவில் நடந்து வருகிற பயங்கரம், மீண்டும் மீண்டும் மற்ற நாடுகளுக்கும் பரவும். தடுப்பூசி அணுகலைத்தடுப்பது மனிதாபிமானமற்றது. அது உலக அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்கை பலவீனப்படுத்தி விடும்” என தெரிவித்தார்.

இத்தனை பரபரப்புக்கு இடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக வர்த்தக அமைப்பபின் 2 நாள் பொதுச்சபை கூட்டம் நேற்று தொடங்கியது.

dailythanthi