முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் இடிந்துவிடக்கூடும் என்றும் அதற்காக புதியதோர் அணை கட்டப்படவேண்டும் என்றும், அது கட்டி முடிக்கப்படும்வரை தற்போதிருக்கும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகக் குறைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கேரள சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி டிசம்பர் 12-ம் நாள் தமிழகத்தின் மாவட்டத் தலைநகர்களில் உண்ணாநோன்பு போராட்டம் நடத்துவதென சென்னையில் கூடிய திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பாசனத்தால் பயனடையும் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் எதிர்வரும் டிசம்பர் 15-ம் நாள் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இதுபோன்ற பிரச்னைகளில் மத்திய அரசின் அணுகுமுறை மிகவும் சோர்வாக உள்ளதே, உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா என செய்தியாளர்கள் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கேட்டபோது, தாம் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதால் வேறு விதமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது என்றார்.