தடுப்பூசி மருந்தை அதிகம் பெற்ற மூன்று நாடுகள்

ஜெனீவா : உலகளவில் ‘சப்ளை’ செய்யப்பட்ட, 200 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசி மருந்தில் பெரும் பங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் பெற்றுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார நிறுவனம், ‘கோவாக்ஸ்’ திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்தை பாரபட்சமின்றி அனைத்து நாடுகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவன பொதுச் செயலரின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வர்டு கூறியதாவது: இந்த வாரம் உலகளவில் தடுப்பூசி சப்ளை, 200 கோடி, ‘டோஸ்’ என்ற அளவை தாண்டியுள்ளது.

இதில், 10 நாடுகளுக்கு மட்டும், 75 சதவீத தடுப்பூசி கிடைத்துள்ளது. அதில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் பங்கு, 60 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில், 10 சதவீதம் உள்ள, குறைந்த வருவாய் உள்ள நாடுகளுக்கு, 0.5 சதவீத அளவிற்கே தடுப்பூசி கிடைத்து உள்ளது. நடுத்தர வருவாய் உள்ள நாடுகளும், சராசரியை விட சிறிதளவே கூடுதலாக தடுப்பூசியை பெற்றுள்ளன.

இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள், அவற்றின் உள்நாட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு வாயிலாக கொரோனா சவாலை சமாளித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar