இந்தியா – சீனா எல்லை பிரச்னை ரஷ்ய அதிபர் புடின் விளக்கம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்:”இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங், மிகவும் பொறுப்பான தலைவர்கள். தங்களுக்கு இடையேயான எல்லை பிரச்னையை தீர்க்கும் திறன் அவர்களுக்கு உள்ளது,” என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிருபர்களுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:அண்டை நாடுகளுக்கு இடையே மோதல், பிரச்னை ஏற்படுவது இயற்கையே. இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்னை உள்ளது. மோடி மற்றும் ஜின்பிங் மிகவும் பொறுப்பான தலைவர்கள். பரஸ்பரம் மற்றவர் மீது மிகுந்த மரியாதை, நம்பிக்கை வைத்துஉள்ளனர்.

தங்களுக்கு இடையேயான பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என அவர்களுக்கு தெரியும். இதில் மூன்றாம் நாட்டின் தலையீடு தேவையில்லை.இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா அடங்கிய, ‘குவாட்’ அமைப்பு குறித்து விமர்சிக்கப்படுகிறது. பல நாடுகள் இணைந்து, மக்களின் நலனுக்காக ஒரு அமைப்பாக செயல்படலாம்; அதில் இடம் பெறுவது குறித்து அந்தந்த நாடுகளே முடிவு செய்ய முடியும்.

அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக செயல்படுவதற்காக, சில நாடுகள் கூட்டு சேர்வதை ஏற்க முடியாது.இந்தியா மற்றும் சீனாவுடனான எங்கள் உறவில் எந்த குழப்பமோ, சங்கடமோ ஏற்பட்டது இல்லை. நாங்கள் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதால், இந்தியாவுக்கு ஆபத்து என்று பேசுகின்றனர். ஆனால் எங்கள் எல்லை எங்களுக்கு தெரியும்.

இந்தியாவுடனான ராணுவ உறவானது, வெறும் ஆயுத விற்பனையோடு நின்று விடவில்லை. பரஸ்பரம் நம்பிக்கை அடிப்படையில் அமைந்தது. ராணுவ ஆயுதத் தயாரிப்பில், ரஷ்யா கூட்டாக இணைந்து செயல்படும் ஒரே நாடு, இந்தியா தான்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, வரும் 16ம் தேதி சந்தித்து பேச உள்ளேன். இதில் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கான உறவின் முன்னேற்றத்தில், இது ஒரு முதல் படியாக அமையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar