3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – சீனாவில் அங்கீகாரம்

கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு அளித்துள்ள சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது

பீஜிங்: சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு சீன நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு அளித்துள்ள சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

சீன நிறுவனமான சைனோவேக் உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசிக்கு கொரோனாவேக் என்று பெயர்.

இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் தனது அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது.

“கொரோனாவேக் தடுப்பூசி எப்போது அவசர பயன்பாட்டுக்கு வரும், எந்த வயதில் இருந்து இந்த தடுப்பூசியை வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று சைனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டாங் கூறியதாக சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை 2 கட்டங்களாக 3-17 வயதுள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு செலுத்தி சைனோவேக் நிறுவனம் பரிசோதித்து உள்ளது. அதில் இந்த தடுப்பூசி நம்பகமானது, செயல்திறன் மிக்கது என்று தெரிய வந்துள்ளது.

சீன மத்திய டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை சைனோவேக் நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டாங் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே கடந்த 1-ந் தேதி சீனாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2-வது தடுப்பூசியான சைனோவேக்கிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்தள்ளது. ஏற்கனவே சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசிக்கும் உலக சுகாதார நிறுவனம் தனது ஒப்புதலை அளித்திருக்கிறது.

இந்த சூழலில் சீன தேசிய சுகாதார கமிஷன் நேற்று கூறும்போது, “சீனாவில் இதுவரை 76 கோடியே 30 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது” என தெரிவித்தது.

சீனா 5 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு தனது ஒப்புதலை அளித்துள்ளது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்க அமைக்கப்பட்டுள்ள கோவேக்ஸ் அமைப்பின் திட்டத்துக்காக சீனா 1 கோடி தடுப்பூசி தர முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

maalaimalar