சீனாவை கலக்கும் யானைகள்: குவியும் பாராட்டு

பீஜிங் : சீனாவில் நகர்ப் பகுதிக்குள் புகுந்து கலக்கி வரும் யானைகளுக்கு உலகளவில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

நம் அண்டை நாடான சீனாவின் யுனான் மாகாண வனத்தைச் சேர்ந்த 16 யானைகள் கிராமம் நகரம் என மனிதர்கள் வாழும் பகுதிகள் வழியாக மகாண தலைநகர் குன்மிங் நோக்கி சென்று கொண்டிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.சீனாவின் ‘வெய்போ’ சமூக வலைதளத்தில் தொடர்ந்து பல நாட்களாக யானைகள் ‘டிரென்டிங்கில்’ உள்ளன.

இந்த வலைதளத்தில் சாலைகளில் யானைகள் செல்வது, வாய்க்காலில் விழுந்த குட்டியை தாய் யானை கடும் முயற்சிக்கு பின் துாக்கி விடுவது போன்ற பல படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. நேற்று சராசரியாக 20 கோடி பேர் இந்த யானைகள் செய்யும் காரியங்களை சமூக ஊடகங்களில் பார்த்து ரசித்துள்ளனர். சாலையில் யானைகள் கூட்டமாக துாங்கும் படத்தை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

ஓராண்டாகவே இந்த யானைகள் கூட்டம் காட்டில் நிலையின்றி 500 கி.மீ. துாரம் நடந்து சில மாதங்களுக்கு முன் நகருக்குள் புகுந்துள்ளன. இதுவரை மனிதர்களை தாக்காத இந்த யானைகள் உணவுக்காக சில கடைகளை சூறையாடியுள்ளன. வயல்களில் புகுந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சோளப் பயிர்களை சாப்பிட்டுள்ளன.இந்த யானைகள் எதை நோக்கி செல்கின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

தன் தலைவரை தேடிச் செல்வதாக சிலர் கூறுகின்றனர். ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் யானைகளை சீன அரசு கண்காணித்து வருகிறது. ஆங்காங்கே போலீசார் மற்றும் அவசர உதவிக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த யானைகள் குழுவில் இருந்து பாதி வழியில் இரு யானைகள் வனப்பகுதிக்கு திரும்பி விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

எஞ்சிய யானைகளில் ஒன்று வழியில் குட்டியை ஈன்றுள்ளது. தற்போது ஆறு பெண், மூன்று ஆண், ஆறு குட்டி யானைகள் உள்ளன. இவை நகருக்குள் மேலும் வருவதை தடுக்க சாலைகளின் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.’யானைகளை யாரும் துன்புறுத்த வேண்டாம்; பட்டாசுகளை வெடித்து துரத்த வேண்டாம்’ என அரசு உத்தரவிட்டுள்ளது. யானைகளை பக்குவமாக வனப் பகுதிக்கு திருப்பி விட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

dinamalar