ராணுவ படையில் 8,500 குழந்தைகள்; 2,700 பேர் உயிரிழப்பு: ஐ.நா., கவலை

ஜெனிவா: ‘உலகெங்கும் நடந்த பல்வேறு உள்நாட்டு கலவரங்களில் கடந்த ஆண்டு, 8,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் ராணுவ வீரர்களாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் 2,700 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்’ என, ஐ.நா., தலைமை செயலர் தெரிவித்து உள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளதாவது: குழந்தைகள் ஆயுதம் ஏந்திய போராட்களில் பங்கேற்பது குறித்த ஆண்டு அறிக்கையை ஐ.நா., பாதுகாப்பு மன்றம் பெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு நடந்த, 21 கலவரம் மற்றும் ஆயுதம் ஏந்திய போராட்டங்களில், குழந்தைகளுக்கு எதிராக 19,379 விதிமீறல்கள் நடந்துள்ளன. குறிப்பாக, சோமாலியா, ஜனநாயகக் காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் சென்ற ஆண்டு அதிகமான விதிமீறல்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு 8,521 குழந்தைகள் ராணுவப் படையில் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். அதில், 2,674 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர். 5,748 குழந்தைகள் பல்வேறு மோதல்களில் பலத்த காயமடைந்து உள்ளனர். குழந்தைகள் கொல்லப்படுவது, துன்புறுத்தப்படுவது, கடத்தப்படுவது, போராளிகளுடன் சேர்க்கப்படுவது, உதவி வழங்கப்படாதது, பள்ளிகள், மருத்துவமனைகளை இலக்காகக் கொண்ட தாக்குதல் ஆகியவற்றை தடுக்க வேண்டும். இதற்கு அனைத்து நாடுகளும் அனைத்து தன்னார்வ அமைப்புகளும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

dinamalar