வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, அதிக வீரியம் உடைய உருமாறிய, ‘டெல்டா’ வகை தொற்று, மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என, வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலேசாகர் டாக்டர் ஆன்டனி பாஸி கவலை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த ஆண்டு டிசம்பரில், கொரோனா இரண்டாவது அலை உருவானது அப்போது, அதிக வீரியம் உடைய, உருமாறிய, ‘ஆல்பா’ வகை வைரஸ், கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்திய பின், பிரிட்டனில் தொற்று பரவல் மெல்ல குறைந்தது. இதையடுத்து, தளர்வுகளை முழுவதுமாக விலக்கிக் கொள்ள பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இந்நேரத்தில், ‘டெல்டா’ வகை வைரஸ் பரவலால், பிரிட்டனில் மீண்டும் தொற்று அதிகரிக்க துவங்கியது.தற்போது தொற்றுக்கு ஆளாகும், 90 சதவீதம் பேர், டெல்டா வகை தொற்றினால் பாதிக்கப்படுவதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆன்டனி பாஸி, செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் முதன்முதலில் கண்டறிப்பட்ட டெல்டா வகை தொற்று, தற்போது அமெரிக்காவிலும் வேகமாக பரவ துவங்கி உள்ளது. புதிதாக பாதிக்கப்படுபவர்களில், 20 சதவீதம் பேருக்கு இந்த வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைக்கு, இந்த டெல்டா வகை வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இதுவரை உருமாறிய வைரஸ் வகைகளிலேயே, இந்த டெல்டா வகை அதிக வீரியம் உடையதாகவும், வேகமாக பரவும் தன்மையுடனும் உள்ளது. பாதிப்பு ஏற்படுபவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு, தொற்று தீவிரம் உள்ளது. அமெரிக்காவில், இரண்டே வாரத்தில் தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ளது.இந்த உருமாறிய புதிய வகை தொற்றை எதிர்த்து, அமெரிக்க தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவது சற்று ஆறுதலான தகவல். இவ்வாறு, அவர் கூறினார்.
dinamalar