மண்டலே: மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு ராணுவ ராணுவத்துக்கும் குடிமக்களுக்கும் தொடர்ப்போராட்டம் வெடித்த வண்ணம் உள்ளது.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மர் குடிமக்கள் ராணுவத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். உலகமே கண்டனம் தெரிவிக்கும் மனித உரிமை மீறல் மியான்மரில் கடந்த நான்கு மாதமாக நடைபெற்று வருகிறது.
எனினும் இந்தப் போராட்டம் ஓயவில்லை. தொடர்ந்து ஜனநாயக ஆதரவாளர்கள் தங்கள் தலைவி ஆங் சன் சூ காய் புகைப்படம் கொண்ட பதாகைகளை ஏந்தி பொதுஇடங்களில் போராடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு ஐநா பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து மியான்மர் ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. மியான்மர் நாட்டு ராணுவத்தின் தலைவர் மின் ஆங் ஹ்லயங் பிறந்தநாளான இன்று, போராட்டக்காரர்கள் அவரது புகைப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மண்டலே நகரில் பல இடங்களில் அவரது பிறந்தநாளை ஒட்டி அவரது புகைப்படங்கள் போராட்டக்காரர்களால் பொது இடங்களில் கொளுத்தப்பட்டன. அவரது பிறந்தநாளை இறந்தநாள்போல கொண்டாடும் கிளர்ச்சியாளர்கள் அவரது இறப்புக்கு தாங்கள் மிக ஆவலாகக் காத்திருப்பதாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளனர்.
இதுபோன்ற ஓர் கொடூரமான நபர் உலகத்தில் பிறந்திருக்கவே கூடாது என்று ஒரு போராட்டக்காரர் தெரிவித்துள்ளார். 65 வயதாகும் மின், 2008ஆம் ஆண்டு மியான்மர் அரசியல் சாசனத்தின்படி தற்போது ஜூன்டா எனப்படும் மியான்மர் ராணுவத்தின் தலைவராக உள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்கியா அகதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த சம்பவத்துக்கு திட்டமிட்ட முக்கிய நபராக மின் திகழ்ந்துள்ளார்.
இதனால் இவருக்கு ‘சர்வதேச பரியா’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனப்படுகொலை செய்வதற்காகவும் அதனை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதற்காகவும் ஃபேஸ்புக் உட்பட பல சமூக தளங்களிலிருந்து இவரது கணக்கு நீக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு இவர் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
dinamalar