விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்

நியூயார்க்:இந்தியாவில் பிறந்து விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது பெண் என்ற பெருமையை, ஸ்ரீஷா பெற உள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக வைத்து, ‘விர்ஜின் காலக்டிக்’ என்ற, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், ‘வி.எஸ்.எஸ்., யூனிட்டி’ என்ற திட்டத்தின் வாயிலாக விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

வரும், 11ம் தேதி, ஆறு விண்வெளி வீரர்களுடன் நியூ மெக்சிக்கோவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.அந்த ஆறு விண்வெளி வீரர்கள் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகின. அந்த பட்டியலில், நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சனும் இடம் பிடித்துள்ளார்.இவருடன் பெத் மோசஸ், கோலின் பென்னட், ஸ்ரீஷா பாந்தலா, மைக்கேல் மசுக்கி, டேவ் மாக்கே உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.

இதில் ஸ்ரீஷா பாந்தலா, 34, இந்திய வம்சாவளிப் பெண். ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீஷா, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்கு குடிபெயர்ந்தார். பின், 2015ல், விர்ஜின் காலக்டிக் நிறுவனத்தில் இணைந்த இவர் தற்போது, இந்நிறுவனத்தில், அரசு விவகாரங்களுக்கான துணை தலைவராக உள்ளார்.இந்தியாவில் பிறந்து விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது பெண் என்ற பெருமையை, ஸ்ரீஷா பெற உள்ளார். ஏற்கனவே கல்பனா சாவ்லா இந்த பெருமையை பெற்றார்.

dinamalar