ஹைதி அதிபர் கொலையில் வெளிநாட்டு சதி அம்பலம்- கொலம்பியா, அமெரிக்காவை சேர்ந்த 17 பேர் கைது

ஹைதி அதிபர்

ஹைதி அதிபர் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்தது தற்போது அம்பலமாகி உள்ளது.

ஹைதி அதிபர் கொலையில் வெளிநாட்டு சதி அம்பலம்- கொலம்பியா, அமெரிக்காவை சேர்ந்த 17 பேர் கைது

போர்ட் அவ் பிரின்ஸ்: கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (வயது 53) கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவி மார்டின் மோயிஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் ஹைதி அதிபர் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. அதிபர் ஜோவனல் மோயிசை படுகொலை செய்த கூலிப்படையினர் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கூலிப்படையினர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இறுதியாக கூலிப்படையினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களில் 15 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்பதும் 2 பேர், ஹைதி-அமெரிக்கர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அதிபர் படுகொலையில் கொலம்பியாவை சேர்ந்த 26 பேர் மற்றும் 2 ஹைதி-அமெரிக்கர்கள் என மொத்தம் 28 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்களில் 8 பேர் தற்போது தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஹைதி அதிபர் கொலையில் தொடர்புடைய கொலம்பியாவை சேர்ந்த 26 பேரில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

maalaimalar