ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வடைந்து உள்ளது.
பாக்தாத், ஈராக்கின் தெற்கு மாகாணம் தி குவாரில் நசிரியா நகரில் இமாம் உசைன் என்ற மருத்துவமனை உள்ளது. இதில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வடைந்து உள்ளது என சுகாதார துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
67க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு காரணமான மருத்துவமனை டீன் சஸ்பெண்டு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் மருத்துவமனை கட்டிடத்தில் கொரோனா நோயாளிகள் சிலர் இன்னும் சிக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
dailythanthi