டெல்டா வகை கொரோனா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவா; ஜெனீவாவில் காணொலி காட்சி வாயிலாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியதாவது:-
கொரோனாவின் டெல்டா வகை மாறுபாட்டால் எதிர்பாராதவிதமாக பேரழிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் நான்காவது வாரமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பத்து வாரங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
புதிய வகை கொரோனா தொற்று கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பரவியது. இப்போது இந்த வகை கொரோனா உலகம் முழுவதும் 104 நாடுகளில் பரவியிருக்கிறது.
வெப்பம் அதிகரித்துள்ள சூழலில் டெல்டா வகை கொரோனா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு வழிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். பிரான்ஸ் நாடு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், ஒரு சில நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இங்கிலாந்து வரும் 19ம் தேதி முதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது நல்லதல்ல. தீயை அணைத்த உடன் ஒரு பகுதியில் தீப்பிழம்பு குறையலாம். ஆனால், ஏதோ ஒரு வகையில் தீ பொறியாக மறைந்திருக்கிறது. தீப்பொறி பிற பகுதிகளுக்கு பயணித்து மீண்டும் தீ கொளுந்து விட்டு எரியும் வாய்ப்புள்ளது. இப்போதைய ஒட்டு மொத்த கொரோனா தொற்று கட்டுப்பாடு என்பது எனக்கு தீயணைப்பு வீரர்களின் தீயணைப்பு முயற்சியை நினைவூட்டுகிறது.
உலக நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக ஒருவருக்கு ஒருவர் இணைந்து போராட வேண்டும். அதே போல தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.
dailythanthi