பொதுக் கூட்ட மசோதா: பாஸ் வழக்கு மீது முடிவு செய்வதை நீதிமன்றம் தள்ளி வைத்தது

பொதுக் கூட்ட மசோதா அரசியலமைப்புக்கு முரணானது என பாஸ் கட்சி வழக்குத் தொடுப்பதற்கு அனுமதிப்பதா இல்லையா என்பது மீது முடிவு செய்வதை நீதிமன்றம் வியாழக்கிழமை வரை தள்ளி வைத்துள்ளது.

சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைச் சேர்ந்த முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் முஸ்லா முகமட் அர்ஷாட் விண்ணப்பித்துக் கொண்டதை தொடர்ந்து அந்த வழக்கு மீது முடிவு செய்வதை  கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் (முறையீட்டு, சிறப்பு அதிகாரப் பிரிவு) இன்று தள்ளி வைத்தது.

பல முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர்கள் டிசம்பர் 7ம் தேதி தொடக்கம் 10ம் தேதி வரை மாநாடு ஓன்றில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் பிரதிவாதிகள் தயாராக இல்லை என முஸிலா நீதிபதி ரோஹானா யூசோப்-பிடம் கூறினார்.

அந்த வழக்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அரசாங்கமும் முதலாவது இரண்டாவது பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அந்த வழக்கைத் தொடுப்பதற்கு அனுமதி கோரி டிசம்பர் 2ம் தேதி பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, பாஸ் பொருளாளர் டாக்டர் ஹாட்டா ராம்லி, மத்தியக் குழு உறுப்பினர் சுல்கெப்லி அகமட் ஆகியோர் மனு கொடுத்திருந்தனர்.

அவர்களது வழக்குரைஞர் குழுவுக்கு முகமட் ஹனிப்பா மைடின் தலைமை தாங்குகிறார்.

“அந்த மசோதா கூட்டரசு அரசியலமைப்பின் 10வது பிரிவுக்கு முரணானது. ஏனெனில் ஒன்று கூடுவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றாலும் அவை முழுமையாக தடை விதிக்கும் அளவுக்குப் போகக் கூடாது,” முகமட் ஹனிப்பா கூறினார்.

தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு முழுமையாக தடை விதிக்கும் அந்த மசோதாவை மக்களவை ஏற்றுக் கொண்டுள்ளது. அது தற்போது மேலவைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.