ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி நடவடிக்கை; தலீபான்களில் பலி-254 காயம்-97

ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் ராணுவம் நடத்திய அதிரடி நடவடிக்கையில் 254 தலீபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது.  இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.  இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  எனினும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.  இதனால் தலீபான்கள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சமீபத்தில், அரசு மற்றும் தலீபான்கள் இடையிலான மோதலில் இந்திய புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலிபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை மாதத்தில் 70 மாவட்டங்கள் தலிபான்களால் கைப்பற்றப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் 2வது பெரிய நகரான கந்தகாரை தலிபான்கள் இலக்காக வைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தகார் விமான நிலையத்தின் மீது அவர்கள் 3 ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 2 ஏவுகணைகள் விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து வெடித்தன.

இதனால், ஓடுபாதை சேதமடைந்தது.  இதனை தொடர்ந்து நேற்று விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  இதனையடுத்து தலிபான்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே நகர பகுதிகளை சுற்றி கடும் சண்டை நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானின் கஜினி, கந்தகார், ஹெராத், பரா, ஹெல்மண்ட், பால்க், குண்டூஸ், காபூல் மற்றும் கபீசா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் ராணுவ வீரர்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு தலிபான்கள் மீது பதிலடி தாக்குதல் தொடுத்தனர்.

இதில், 254 தலிபான்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  97 பேர் காயமடைந்து உள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் தலிபான்களால் வைக்கப்பட்ட 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

dailythanthi