மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் வடக்கு மாகாணம் போர்னோவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து 270 மாணவிகளை கடத்தி சென்றனர்.இந்த கடத்தல் சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவிகளை மீட்க வலியுறுத்தி சமூக வலைதளங்களில் உலக அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே பயங்கரவாதிகளுடன் நைஜீரிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு 82 மாணவிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் பல மாணவிகள் பயங்கரவாதிகளிடம் இருந்து தாமாகவே தப்பி வந்தனர்.
எனினும் 113 மாணவிகள் பயங்கரவாதிகளால் இன்னும் சிறைபிடித்து வைக்கப்பட்டு உள்ளதாக நம்பப்படுகிறது.இந்த நிலையில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு சிபோக் நகர பள்ளி மாணவி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக போர்னோ மாகாண கவர்னர் பாபகானா ஜுலம் தெரிவித்துள்ளார். அந்த பள்ளி மாணவி, பயங்கரவாதிகளின் சிறையில் இருந்தபோது திருமணம் செய்துகொண்ட தனது கணவருடன் இணைந்து அண்மையில் ராணுவத்திடம் சரணடைந்ததாக பாபகானா ஜுலம் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து பள்ளி மாணவியின் பெற்றோர் அவரது அடையாளத்தை உறுதி செய்த பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டதாக கவர்னர் கூறினார்.மேலும், கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைந்தது, சிறைபிடிக்கப்பட்டிருக்கும் மற்ற மாணவிகளையும் கண்டுபிடிக்கும் நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
dailythanthi