ரஷிய ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வினியோகம் தடைப்பட்டதால் கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
மாஸ்கோ, ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான வடக்கு ஒசேஷியா அலனியாவின் தலைநகர் விளாடிகாவ்காசில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்ய பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் குழாயில் நேற்று முன்தினம் மாலை திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகளுக்கான ஆக்சிஜன் வினியோகம் தடைபட்டது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வந்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க தொடங்கினர். இதன் மூலம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.
இதனிடையே ரஷியாவின் மத்திய சுகாதார கண்காணிப்பகம் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
dailythanthi