கட்டுகட்டாக பணத்தை கார்களில் திணித்து எடுத்துச் சென்ற அஸ்ரப் கனி..!

காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். அல்லாஹ்வின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தோம் என்று தலிபான் தலைவர்கள் பெருமையாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி கட்டுக்கட்டாக பணம், நான்கு கார்கள், ஒரு ஹெலிகாப்டர் உடன் ஓமனுக்கு சென்று தஞ்சம் அடைந்து விட்டார் என காபுலில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் தற்போது தகவல் அளித்துள்ளனர்.

முன்னதாக தலைநகர் காபூலின் அனைத்து பகுதிகளையும் தாலிபான்கள் கட்டுப்படுத்த துவங்கியபோது வன்முறையையும் போராட்டத்தையும் தவிர்க்கத் தான் பதவி விலகுவதாக அறிவித்த அஷ்ரப் கனி அண்டை நாடான டாஜ்கிஸ்தானில் குடி ஏற முயன்றார். ஆனால் அவரை நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது.

இதனை அடுத்து அவர் நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை அடைத்து திணித்து அதுபோதாமல் ஹெலிகாப்டர் ஒன்று பணக்கட்டுகளை வைத்து ஓமனுக்கு சென்று குடியேறி விட்டார் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர். கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும் அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தாலிபான்கள் தங்களது ஆட்சியில் பழைய இஸ்லாமிய சட்டங்களை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். 10 வயதுக்குமேல் பெண் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கக் கூடாது, அவர்கள் தங்கள் முகம் மற்றும் உடலை முழுவதுமாக மூடும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், திருடக் கூடாது உள்ளிட்ட பல இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்த உள்ளனர்.

குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுதல், பிரம்படி கொடுத்தால் உள்ளிட்ட தண்டனைகளை அளிக்கவும் தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். இவர்களது இந்த கொடுமையான ஆட்சிக்கு தற்போது சீனா ஆதரவு தெரிவித்துள்ளது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. ஒரு பயங்கரவாத அமைப்பு இஸ்லாமிய நாட்டை ஆக்கிரமித்து ஆளுவது உலகையே அச்சுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

(நன்றி Dinamalar)