டெல்லி: ஆப்கானிஸ்தான் மக்களை நாங்கள் கைவிடவில்லை என்று காபூலிலிருந்து இந்தியா திரும்பிய தூதர் ருபேந்திர டான்டோன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தாலிபான்கள் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. 20 வருட போர் நிறைவு பெற்ற நிலையில் எந்த மாற்றமும் இன்று 2001க்கு முன் இருந்தது போல தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து காபூலில் இருந்து மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.
பல நாட்டு தூதரக அதிகாரிகளும் காபூலை காலி செய்து வருகிறார்கள். இந்தியாவும் விமானப்படை உதவியுடன் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இரண்டு கட்டமாக கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை தூதரக அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பொது மக்கள் இந்தியா கொண்டு வரப்பட்டனர். ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருபேந்திர டான்டோன் இந்திய வரவழைக்கப்பட்டார்.
பேட்டி
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருபேந்திர டான்டோன் அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளோம். இந்திய விமானப்படைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். மிக கடினமான சூழ்நிலையில் இந்திய விமானப்படை எங்களை மீட்டு இந்தியா கொண்டு வந்தது. சரியான நேரத்தில் படைகள் எங்களை மீட்டதற்கு நன்றி.
தாய்மண்
மீண்டும் தாய் மண்ணிற்கு திரும்பி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு வாரங்கள் கடுமையாக இருந்தது. கடுமையான கடைசி நேர பணிகள், மோசமான சூழ்நிலைக்கு இடையில் உழைத்தோம். இப்போது எல்லாம் முடிந்து பாதுகாப்பாக திரும்பியது மகிழ்ச்சி தருகிறது.இந்தத் அசம்பாவிதமும் ஏற்படாமல், பாதுகாப்பாக, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் திரும்பி வந்துள்ளோம். 3 நாட்களில் 192 பேர் வரை இரண்டு கட்டங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள்
ஆப்கானிஸ்தானில் இன்னும் சில இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் தொடர்ந்து இயக்கப்பட்டதும். காபூல் விமான நிலையத்தில் பயணிகள் விமானம் அனுமதிக்கப்பட்டதும் ஏர் இந்தியா விமானமும் இயக்கப்படும். நாங்கள் ஆப்கானிஸ்தான் மக்களை கைவிடவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான நலத்திட்டங்கள், அவர்களுடனான உறவு இன்னும் எங்கள் மனதில் இருக்கிறது.
உறவு
அவர்களுடனான பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் தொடரும். ஆனால் எப்படிபட்ட பேச்சுக்கள் நடத்தப்படும் என்று இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. அங்கு சூழ்நிலை மாறி வருகிறது. இதனால் வரும் நாட்களில்தான் பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் குறித்து முடிவு எடுக்கப்படும், என்று ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருபேந்திர டான்டோன் தெரிவித்துள்ளார்.
(நன்றி Oneindia Tamil)