வேலையை காட்டும் தாலிபான்-போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அங்கு போராடி வரும் மக்களுக்கு எதிராக தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் பலர் தாலிபான் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். நாட்டை விட்டு வெளியேற முடியாத மக்கள் தாலிபான் ஆட்சிக்கு எதிராக நாட்டுக்கு உள்ளேயே கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காபூலில் வடக்கு உச்சியில் உள்ள பஞ்ச்சீர் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக ‘Northern Alliance’ குழுவை சேர்ந்த மக்கள் தங்கள் கொடியை பறக்க விட்டுள்ளனர். அதேபோல் பல்வேறு பகுதிகளில் தாலிபான்களுக்கு எதிராக சிறு சிறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

எப்படி

தாலிபான்கள் அமைதியான ஆட்சியை கொடுப்போம், மக்கள் வீடுகளுக்கு செல்ல மாட்டோம், பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனாலும் அவர்களின் டிராக் ரெக்கார்ட் நம்பும்படியாக இல்லாத காரணத்தால் மக்கள் அவர்களை எதிர்த்து வருகிறார்கள். அதோடு தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் நாட்டின் பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று பெயர் மாற்றி உள்ளனர்.

கொடி மாற்றம்

அதேபோல் ஆப்கானிஸ்தான் கொடிக்கு பதிலாக தங்களின் வெள்ளை கொடியை தாலிபான் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் ஆட்சியின் கீழ் நாட்டின் புதிய கொடியாக தாலிபான்கள் வெள்ளை கொடியை முன்னிறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஆப்கான் கொடிக்கு பதிலாக தாலிபான் கொடியை பயன்படுத்துவதை எதிர்த்து காபூலுக்கு அருகில் இருக்கும் முக்கிய மாகாண தலைநகரமான ஜலாலாபாத்தில் மக்கள் போராடி வருகிறார்கள்.

போராட்டம்

வெள்ளை கொடியை பயன்படுத்த கூடாது, பழைய கொடியை கொண்டு வாருங்கள்.. இது தவறு என்று கூறி மக்கள் போராடி வருகிறார்கள். இதையடுத்து அங்கு தாலிபான் படைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாலிபான்கள் சரமாரி தாக்குதல் நடத்தினார்கள். அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதோடு அங்கு நின்று இருந்த மக்களை நோக்கியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.

துப்பாக்கி சூடு

இந்த போராட்டத்தில் முதல்முறையாக பெண்களும் கலந்து கொண்டனர். இவர்கள் கொடி மாற்றுவது குறித்து மட்டுமின்றி தங்களின் உரிமைகள், சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்தும் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து அங்கு தாலிபான் நடத்திய துப்பாக்கி சூட்டால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சூடு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த துப்பாக்கி சூட்டால் யாராவது காயம் அடைந்தார்களா, பலியானார்களா என்ற விவரம் வெளியாகவில்லை.

(நன்றி Tamil oneindia)