ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துவிட்டனர் என்கிற செய்தியோடு, வந்த காணொலிகள் பதைபைக்க வைக்கின்றன.
தலைநகர் காபூல் விமான நிலையத்தை நோக்கி மக்கள் கும்பல் கும்பலாக ஓடி வருகிறார்கள்; விமானத்தில் இடமில்லை… அதன் டயர்களைப் பிடித்துக்கொண்டு தொங்க.. விமானம் பறக்க.. அதிலிருந்து விழுந்து மூவர் பலியாகிறார்கள்; ‘இனி இங்கே நாங்கள், சுயமரியாதையோடு வாழ முடியாது!’ எனப் பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள். ஒட்டுமொத்த உலக மக்களும், இந்தக் காட்சிகளைப் பார்த்து உறைந்துபோய் நிற்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிலர், தாலிபான்களின் ஆட்சியை வரவேற்கிறார்கள்! ‘இறைவனின் ஆட்சி அங்கே மலர்ந்துள்ளது!’ எனப் பூரிப்படைகிறார்கள். சமூக வலைதளங்களில் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், தாலிபான்களின் கடந்த கால ஆட்சி அப்படிப்பட்டது. 1996ஆம் ஆண்டிலும் தாலிபான்கள், ஆப்கனின் ஒரே ஒரு மாகாணத்தைத் தவிர, மற்ற பகுதியை எல்லாம் ஆண்டார்கள். அடுத்த ஐந்தாறு ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாட்டில் அந்நாடு இருந்தது.
தாலிபான்களின் ஆட்சி எப்படிப்பட்டது?
திரைப்படம் பார்ப்பது, ஒளிப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது போன்ற கலைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. கேளிக்கை விடுதிகள் பல மூடப்பட்டு மசூதிகளாகவும் மதரசாக்களாகவும் ஆக்கப்பட்டன. திருடினால் கைகள் வெட்டப்பட்டன. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் நடுரோட்டில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
ஆணின் துணையின்றிப் பெண்கள் வெளியே நடமாடுவது முற்றிலும் தடை; அப்படியே வந்தாலும் முகம், உடல் முழுதும் மூடியிருக்க வேண்டும். இல்லையென்றால் கசையடி, மரண தண்டனை. ஆண்கள் தாடி வளர்ப்பது கட்டாயம்; இதை மீறுபவர்களுக்குக் கடும் தண்டனை!
அரசியல் இயக்கங்களுக்குத் தடை. பெரும்பாலான கல்வி நிலையங்கள் மூடப்பட்டன; பெண்கள் படிப்பதற்கு முற்றிலும் தடை! மீறியவர்கள் உயிர் பறிக்கப்பட்டது! அதனால்தான், தற்போது மீண்டும் தாலிபான்கள் ஆட்சி என்றவுடன் மக்கள் அஞ்சி, வெளிநாடுகளுக்குத் தப்பி ஓட முயற்சிக்கிறார்கள்.
ஏன் இந்த மவுனம்?
இப்படிப்பட்ட தாலிபான்கள் ஆட்சியைத்தான் இங்கே இஸ்லாமியர்கள் சிலர் வரவேற்று சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வாழ்த்துகிறார்கள். மற்ற பலர், இஸ்லாமிய அமைப்புகள் மவுனமாக இருக்கின்றன. இவர்கள்தான்
‘பாஜக மதவாத ஆட்சி’ எனக் கொதிப்பவர்கள். அந்தக் கொதிப்பில் நியாயம் உண்டுதான். ஆனால், தாலிபான்கள் ஆட்சியை எப்படி புனிதப்படுத்துகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
இஸ்லாமியர்கள் மட்டுமல்ல; பகுத்தறிவாளர்கள், முற்போக்குவாதிகள் என முகம் காட்டும் வெகு பலரும்கூட மவுனம் காக்கவே செய்கிறார்கள். கேட்டால், ‘அமெரிக்காவை தாலிபான்கள் ஓடஓட விரட்டிவிட்டார்கள்!’ என்கிறார்கள்.
உண்மையில், தாலிபான்களுடன் ஒப்பந்தம் போட்ட பிறகே அமெரிக்கா ஆப்கனைவிட்டு விலகியிருக்கிறது. அதன் நலன்கள் பாதிக்கப்படாது என தாலிபான்கள் உறுதி அளித்திருக்கிறார்கள். ‘இனியும் தனது படைகளை ஆப்கனில் வைத்து செலவு செய்யத் தேவையில்லை’ என்றே அமெரிக்கா விலகியிருக்கிறது.
இதெல்லாம் தெரிந்தாலும், பகுத்தறிவுவாதிகள், முற்போக்குவாதிகள், மவுனம் காக்கிறார்கள். அதாவது, ‘சிறுபான்மை இஸ்லாமியர்களை எதிர்த்துவிடுவதாக ஆகிவிடும்’ (!) என்று அச்சப்படுகிறார்கள்.
ஆப்கனில் பரிதவித்து நிற்கும் இந்து, சீக்கிய சிறுபான்மையினர், அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து இவர்கள் பார்வை செல்வதில்லை. தாலிபான்கள் இல்லாத கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில், ஆப்கன் மக்கள் ஓரளவு சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள் என்பதுதானே உண்மை? எழுத்தறிவு மேம்பட்டது. குறிப்பாக, பெண்கள் படித்தனர். சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெருகின; தேர்தல் நடந்தது. பெண்கள் போட்டியிட்டனர்.
தாலிபான்கள் மாறிவிட்டார்களா?
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தாலிபான்களை ஆதரிப்பவர்கள் சில வாதங்களை வைக்கிறார்கள். “ பெண்களுக்கு உரிமை அளிக்கப்படும் என தாலிபான்கள் கூறியிருக்கிறார்களே” என்கின்றனர்.
உண்மை என்ன?
ஒரு உதாரணம். ஆப்கனில் ஹேராத் என்ற நகரத்தில வசிப்பவர், ஜாஹிரா என்ற பெண். கடந்த இருபது ஆண்டுகளில் தாலிபன்கள் இல்லாததால், நன்கு படித்துள்ளார். தற்போது உள்ளூர் என்ஜிஓ ஒன்றில் இணைந்து பாலின சமத்துவத்துவம் ஏற்பட உழைத்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியையும் தாலிபான்கள் பிடித்துவிட்டனர்.
இப்போது ஜாஹிரா, “நானும் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும், வீடுகளுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. பலவருடமாக சிரமப்பட்டு படித்து பணியில் சேர்ந்தேன்.. அதுவும் சமுதாயப் பணி. ஆனால் இனி என்னால் வெளியில் செல்லவே முடியாது” என்கிறார்.
இதுவரை 25,000 பேருக்கு மேல் ஆப்கனை விட்டு வெளியேறிவிட்டனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் பெண் குழந்தைகளும்தான். சில நாட்களுக்கு முன் கால் தெரியும்படி செருப்பு அணிந்த சில பெண்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர் தாலிபான் வீரர்கள். அதோடு, இறுக்கமாக உடை அணிந்ததாகவும் ஒரு பெண்ணுக்குச் சவுக்கடி தண்டனை கொடுத்தனர். இதைவிட கொடூரம், ஆண் துணை இல்லாமல் வெளியே வந்தார் என ஒரு பெண்ணைக் கொலையே செய்துவிட்டனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, ‘பெண் அரசியல்வாதிகளுக்கு ஆப்கான் மக்கள் வாக்களிப்பாளர்களா?’ என செய்தியாளர்களே கேட்க, தாலிபான்கள் சிரித்த சிரிப்பு அந்த அறையைத் தாண்டி எதிரொலித்தது. தவிர, கேள்வி கேட்டவரை, ‘நிறுத்து’ என்று கண்டிக்கவும் செய்தனர்.
“தலிபான்களால் பள்ளிகள் அழிக்கப்படுகின்றன. இருபது லட்சம் பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டு இருக்கின்றனர். பெண்களின் எதிர்காலம் குறித்து நினைக்கவே அச்சமாக இருக்கிறது!” என்கிறார் ஆப்கன் நாட்டின் புகழ்பெற்ற பெண் திரைப்பட இயக்குநரான சஹ்ரா கரிமி.
இதுதான் தாலிபான்கள் ஆட்சியில் பெண்களின் நிலை. இதைத்தான், பெண்ணுரிமையை காப்பார்கள் தாலிபான்கள் என போற்றுகிறார்கள் இங்குள்ள இஸ்லாமியர்கள் சிலர். “விபசாரத்தை தடை செய்துவிட்டனர் தாலிபான்கள்!” என்கிறார்கள், தாலிபான்களை ஆதரிப்பவர்கள். ஆனால், உண்மை வேறு. “தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், திருமணம் ஆகாத பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்க கோரி மிரட்டி கொண்டிருக்கிறார்கள் தாலிபான்கள்; இது பாலியல் வன்முறையின் ஒரு வடிவம்தானே!” என கண்டனம் தெரிவிக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
பெண்களின் போராட்டம்
தாலிபான்கள் சிறைப்பிடித்துள்ள இளம் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுவருவதாகத் தனது ஆய்வில் தெரியவருவதாக ஐநா தெரிவித்தது. இதனால்தான், நாட்டின் சில பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றி வருகிறார்கள் என்கிற தகவல் வெளியான உடனே அப்போதைய ஆப்கன் அரசுக்கு ஆதரவாகப் பெண்களும் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தனர். அவர்கள் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளையும் ஆப்கானிஸ்தானின் கொடியையும் சுமந்து நிற்கும் படங்கள் வெளியாகின.
ஜோஸ்ஜான் மற்றும் கௌர் பகுதிகளில் நடக்க ஆரம்பித்த இந்தப் பெண்கள் புரட்சி, காபூல், ஃபார்யாப், ஹெராத் மற்றும் பிற நகரங்களிலும் நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தற்போதும் தாலிபான்களை எதிர்த்து அங்கு பெண்கள் போராடித்தான் வருகிறார்கள். ஜலாலாபாத் நகரத்தில் தாலிபான்களுக்கு எதிராக பதாதைகள் ஏந்தி முழக்கமிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
2018ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் மைதான் சாகர் நகரத்தின் என்ற நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜரீபா கபாரி என்கிற பெண்மணி. ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர். ‘பெண் அரசியலுக்கு வருவதா… அதிலும் முகம் மறைக்காமல் நடமாடுவதா’ எனக் கொதித்த தாலிபான்கள், மூன்று முறை இவரை கொலை செய்ய முயன்றனர். ஜரீபா தப்பிவிட்டார் ஆனால் அவரது தந்தை வாசிம் கபாரியைக் கடந்த ஆண்டு சுட்டுப் படுகொலை செய்தனர்.
தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் இவர், “என் கணவர் உட்பட குடும்பத்தினருடன் இங்குதான் இருக்கிறேன். குடும்பத்தினரை விட்டு சென்றுவிட முடியாது. தாலிபான்கள் எங்களைத் தேடி வந்து கொலை செய்வார்கள். அதற்காக நான் இந்த தேசத்தைவிட்டு தப்பி ஓட முடியாது!” என கூறியிருக்கிறார்.
இப்படிப்பட்ட தாலிபான்களைத்தான் உயர்த்திப் பிடித்து சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் சிலர், இங்கே தமிழ்நாட்டில் எழுதி வருகிறார்கள். பல இஸ்லாமியர்கள் மவுனம் காக்கிறார்கள். இஸ்லாமிய அமைப்புகளும் அமைதியாக இருக்க, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரான மவுலானா சஜத் நவுமனி என்பவர், “தாலிபான்களே உங்களுக்கு வாழ்த்துக்கள். தொலைதூரத்தில் இருக்கும் இந்த இந்திய முஸ்லிம் உங்களுக்கு சல்யூட் அடிக்கிறேன். உங்கள் தைரியத்துக்கும், உங்கள் உத்வேகத்திற்கும் சல்யூட்” என பகிரங்கமாகக் கூறி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
தாலிபான்களின் அட்டூழியங்களைக் கண்ணாரக் கண்டும் அவர்களை ஆதரிக்கும் மனப்போக்கு ஏன்? மதம்தான் காரணம்!
மதமான பேய் பிடித்தால்… அதுவும் அரசாங்கத்தைப் பிடித்தால் நாடே சுடுகாடாகும்! பயங்கரவாதச் செயல்களும் மனித உரிமை மீறல்களும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அடக்குமுறைகளும் எங்கிருந்து எந்த வடிவில் வந்தாலும் நாம் அதை எதிர்க்க வேண்டும். மதம் இதில் குறுக்கே வர அனுமதிக்கக் கூடாது.
(நன்றிTamil samayam)