தாலிபன் கட்டளை: ஆப்கானியர்கள் வெளியேற தடை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டுப்பாடு

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையம் செல்ல முற்படும் அந்நாட்டவர்களை தாலிபன்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த தாலிபன் போராளிகள், கடைசியாக தலைநகர் காபூலையும் கைப்பற்றினார்கள். பஞ்ஜிர் பகுதியைத் தவிர நாட்டின் எல்லா பகுதிகளையும் அவர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டுப் படையினர் வெளியேற ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை தாலிபன் அமைப்பு கெடு விதித்துள்ளது. இந்த கெடு, ஏற்கெனவே அமெரிக்காவுடன் தாலிபன் செய்து கொண்ட உடன்பாட்டின்போது ஒப்புக் கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

அதன்படி, நாட்டை கைப்பற்றிய தாலிபன்கள், அடுத்த கட்டமாக புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முக்கிய நடவடிக்கையை அவ்வப்போது செய்தியாளர் சந்திப்பு வாயிலாக விளக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், காபூலில் தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது தமது அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விளக்கினார். அதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது.

தாயகத்தை விட்டு ஆப்கானியர்கள் வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையம் செல்வதை தாலிபன் விரும்பவில்லை. அதே சமயம், அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான கூட்டுப்படையினருடன் வேலை செய்த ஆப்கானியர்கள் செல்லலாம்.

வெளிநாட்டில் உள்ள ஆப்கானியர்கள் தாயகம் திரும்ப அழைப்பு விடுக்கிறோம். இங்கே திரும்பி வாருங்கள். நமது நாட்டை நாமே மீள்கட்டியெழுப்புவோம்.

போர் முடிந்து விட்டது. இனி இங்கேயே வேலை செய்யுங்கள், இயல்பாக வாழுங்கள். யாருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது.

ஆப்கானிஸ்தானில் இதுவரை வேலைக்கு சென்று வந்த பெண்கள் நிரந்தரமாக வேலைக்கு போகக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. அதற்காக சில வழிமுறைகளை வகுக்கவிருக்கிறோம். அது தொடர்பாக முடிவெடுக்கும்வரை வேலைக்கு சென்ற பெண்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவோம். அவர்கள் தங்களுடைய பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்யலாம்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மதரஸாக்கள், மருத்துவமனைகள், உள்ளூர் அரசு மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்கள் எப்போதும் போல செயல்படலாம்.

சிஐஏ இயக்குநரும் தாலிபன் தலைவரும் காபூலில் பேசியதாக வெளிவந்த தகவல் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று அவர் பதிலளித்தார்.

ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டை தாலிபன் தன்வசமாக்கிக் கொண்ட ஒன்பது நாட்களில் இதுவரை பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரும் ஆப்கானியர்களும் அந்த நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் முதல் ஆப்கானிஸ்தானை விட்டு 63,900 பேர் வெளியேறியிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் கூறியிருக்கிறது.

மேலும், அந்த நாட்டில் காபூல் விமான நிலையத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக ஜி7 உச்சி மாநாட்டில் இன்று விவாதிக்கப்பட்டது.

ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசனை

இந்த கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்புவோரை மீட்கும் நடவடிக்கையில் காலக்கெடுவைக் கடந்து விட்டாலும், பாதிக்கப்பட்டவர்களை வெளியே அழைத்து வர பாதுகாப்பான வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று கூறினார்.

கடந்த சில நாட்களில் காபூல் நகரில் இருந்து 57 விமானங்களின் சேவை மூலம் 9,000 பேர் வரை பிரிட்டன் மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் காபூல் விமான நிலைய சூழ்நிலைகள் சரியாக இல்லை என்றும் விமான நிலையத்தில் இருப்பவர்களை பாதுகாப்பாக அழைத்து வர சம்பந்தப்பட்ட நாடுகள் கூட்டாக பணியாற்ற வேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல தலைவர்களும், ஆகஸ்ட் 31க்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டினரையும் மீட்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக கூறியுள்ளனர்.

ஆனால், இதில் நிலவும் நடைமுறை சிக்கல்களையும் அந்த தலைவர்கள் விவாதித்தனர்.

(நன்றி BBC TAMIL)