சீனாவில் பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களில் அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம் அறிமுகம்

பீஜிங்:

சீனாவின் அதிபர் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார். தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிக்கும் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர் சமீப ஆண்டுகளாக ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியை மேலும் வலுப்படுத்தவும், எதிர்காலத்திலும் இந்தக் கட்சியின் அதிகாரத்தை நிலை நாட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான தேசிய பாடத்திட்டத்தில் அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஒரு புதிய சகாப்தத்தை காண சீன பண்புகளுடன் சோஷலிசம் பற்றிய ஜின்பிங்கின் சிந்தனை அனைத்து நிலைகளிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் இணைக்கப்படும் என சீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய பாடநூல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘’அதிபரின் அரசியல் சித்தாந்தம், அடிப்படை தொழிற்கல்வி மற்றும் உயர்கல்வியின் பல்வேறு பாடங்களை உள்ளடக்கிய பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

புதிய பாடத்திட்டத்தின்படி, தொடக்கப்பள்ளிகள், சீன கம்யூனிஸ்டு கட்சிமற்றும் சோசலிசம் மீதான அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்.

நடுநிலை பள்ளிகளில், அடிப்படை அரசியல் தீர்ப்புகளையும் கருத்துக்களையும் உருவாக்க மாணவர்களுக்கு உதவ, புலனுணர்வு அனுபவம் மற்றும் படிப்பறிவு ஆகியவற்றின் கலவையில் கவனம் செலுத்தப்படும்.

கல்லூரிகளில், தத்துவார்த்த சிந்தனையை நிறுவுவதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்’’ என கூறப்பட்டுள்ளது.

 

(நன்றி Maalaimalar)