60 சதவிகிதம் அளவிலான எண்ணெய், எரிவாயுவும், 90 சதவிகிதம் அளவிலான நிலக்கரியும் பூமிக்கு அடியிலேயே இருந்தால்தான் பூமி வெப்பமாவதைத் கட்டுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உலகின் எரிபொருள் தேவை மற்றும் விநியோகத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நேச்சர் இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
வருங்காலத்தில் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் எரிபொருள்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு முன்பு கணித்ததைவிடக் குறைவாகவே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் தோண்டி எடுக்கப்படும் எரிபொருள்களின் அளவு 2020-ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டி, பின்னர் 2050-ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆண்டுக்கு 3% என்ற அடிப்படையில் குறைய வேண்டும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தார்கள். ஆனால் அது அப்படி நடக்கவில்லை.
“கோவிட் பெருந்தொற்று காரணமாக எரிபொருள்கள் தோண்டி எடுக்கப்படுவது குறைந்திருந்தது. ஆனால் அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது” என்கிறார் எரிபொருள்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபடும் பேராசிரியரான ஸ்டீவ் பை.
(நன்றி BBC TAMIL)