காண்டாமிருகங்களை தலைகீழாக தொங்கவிட்டு, அதன் மூலம் விலங்குகளுக்கு என்ன விளைவு ஏற்படும் என்று சோதிக்கும் ஓர் ஆராய்ச்சிக்கு இந்த ஆண்டின் மாறுபட்ட பரிசு ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது.
அரசியல்வாதிகளின் தொப்பைக்கும் நாட்டில் இருக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு, நடைபாதையில் வீசப்பட்ட சூயிங் கம்மில் உள்ள பாக்டீரியா மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் கரப்பான் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் பரிசின் பெயர் இக்நோபல் (Ig Nobel). இவை வேடிக்கையாக வழங்கப்படுபவை. உண்மையான நோபல் பரிசுகள் அல்ல. அந்த அளவுக்கு பிரபலமாகவும் இல்லை.
கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்காவில் வழக்கமாக நடக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இதற்கான விழாவை நடத்த முடியவில்லை. அதனால் அனைத்து வேடிக்கையான காட்சிகளும் ஆன்லைனிலேயே நடந்து முடிந்தன.
“இக்நோபல் பரிசுகள் முதலில் உங்களைச் சிரிக்க வைக்க வேண்டும். பின்னர் சிந்திக்கத் தூண்ட வேண்டும்” என்கிறது இதை வழங்கும் அறிவியல் நகைச்சுவை இதழான Annals of Improbable Research.
சரி காண்டா மிருக ஆராய்ச்சிக்கு வருவோம். போக்குவரத்து இடமாற்றம் தொடர்பான பிரிவில் இந்த ஆராய்ச்சிக்கு இக்நோபல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 காண்டா மிருகங்களை தலைகீழாக 10 நிமிடங்களுக்குத் தொங்கிவிட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கார்னெல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விலங்கு ஆராய்ச்சியாளர் ராபின் ரேட்கிளிஃப், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இந்த ஆராய்ச்சியைச் செய்து பார்த்திருக்கிறார். ஹெலிகாப்டருக்கு அடியில் விலங்குகளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கிவிட்டால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுமா என்று அறிவதற்காக இதைச் செய்தனர்.
ஆப்பிரிக்காவில் காண்டா மிருகங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றும் பொருட்டு அவற்றை ஹெலிகாப்டரில் தலைகீழாகத் தொங்கிவிட்டு எடுத்துச் செல்வது வழக்கம்.
இருப்பினும், விலங்குகளின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு தலைகீழாக பறக்கும்போது இயல்பாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க யாரும் அடிப்படை ஆய்வைச் செய்யவில்லை என்று ராபின் கூறுகிறார்.
“ஹெலிகாப்டர்கள் மூலம் காண்டாமிருகங்களை தலைகீழாகக் கொண்டு சென்ற முதல் நாடு நமீபியா அல்ல. ஆனால் அவர்கள் அதைப் பின்னோக்கிப் பார்த்தார்கள். ‘இதை ஆய்வு செய்து கண்டுபிடிப்போம், இது காண்டாமிருகங்களுக்கு உகந்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று யோசித்தார்கள் ” என்று பிபிசியிடம் தெரிவித்தார் ராபின்.
இந்த அடிப்படையில் ராபினும் அவரது குழுவினரும் நமீபிய நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 12 காண்டா மிருகங்களை கிரேனிலில் தலைகீழாகத் தொங்கிவிட்டு விளைவுகளைப் பதிவு செய்தது.
விலங்குகள் அதைச் சமாளித்தன. உண்மையில், காண்டாமிருகங்கள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையில் ஒரு பக்கமாகப் படுக்க வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதை விட சிறப்பாகவே இருந்தன. அதனால் தலைகீழாகத் தொங்கவிடப்படுவதே சிறந்தது என்ற முடிவுக்கு இந்தக் குழு வந்தது.
“அதன் காரணம், ஒரு காண்டாமிருகம் அதன் ஒரு பக்கமாக படுத்திருக்கும்போது, ரத்த ஓட்டமானது ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். வேறுவிதமாகக் கூறுவது என்றால், நுரையீரலின் அடிப்பகுதி அதிக ரத்த ஓட்டத்தைப் பெறுகிறது. ஆனால் மேல்பகுதிக்கு ரத்தம் போதுமான அளவு செல்வதில்லை. அதனால் காண்டா மிருகம் நேராக நிற்பதைப் போன்று, தலைகீழாகத் தொங்கவிடப்படும்போதும் நுரையீரல் சமமான ரத்த ஓட்டத்தைப் பெறுகிறது” என்று விளக்கினார் ராபின்
இக்நோபல் பரிசுகள் உண்மையான நோபல் பரிசுகளைப் பெற்றவர்களால் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவில் பிரான்சிஸ் அர்னால்ட் (2018 வேதியியல்), மார்ட்டி சால்ஃபி மற்றும் எரிக் மஸ்கின் (2017 பொருளாதாரம்) ஆகியோர் பங்கேற்றனர்.
வெற்றியாளர்களுக்கு ஜிம்பாப்வே நாட்டின் 10 டிரில்லியன் போலியான கரன்சி தாள் வழங்கப்பட்டது.
“இக்நோபல் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டபோது, இது நல்லதா கெட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ‘உங்களை சிரிக்க வைக்கிறது, பிறகு சிந்திக்க வைக்கிறது’ என்று நினைக்கிறேன். பூமியில் வாழும் இந்த அற்புதமான விலங்குகளை காப்பாற்ற என்னென்ன முயற்சிகள் நடக்கின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ” என்றார் ராபின்.
“இது உண்மையில் காண்டாமிருக இடமாற்றத்தையும், யானை இடமாற்றத்தையும் மாற்றியுள்ளது. இந்த பெரிய விலங்குகளை தலைகீழாகத் தூக்கிச் செல்வது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எருமை, நீர்யானை மற்றும் ஒட்டகச்சிவிங்கி போன்ற பிற உயிரினங்களில் இந்த ஆராய்ச்சியை நாம் செய்ய வேண்டியிருக்கிறது ” என்றார் ராபின் குழுவைச் சேர்ந்த பீட் மோர்கெல் என்ற மருத்துவர்.
ராபின் குழுவைத் தவிர சூயிங் கம்மில் உள்ள பாக்டீரியாக்கள், திரையரங்கில் இருக்கும் காற்று, அரசியல்வாதிகளின் தொப்பை என பல்வேறு மாறுபட்ட ஆராய்ச்சிகளுக்கும் இக்நோபல் பரிசுகள் கிடைத்தன.
(நன்றி BBC TAMIL)