அமெரிக்காவில் இந்தியர்கள் கிரீன்கார்டு பெற கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமா?- வருகிறது புதிய சட்டம்

நியூயார்க்,

அமெரிக்காவில் ஆண்டு தோறும் வெளிநாடுகளில் இருந்து பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பலர் குடியேறுகின்றனர். குறிப்பாக, அதில் இந்திய மக்களின் வருகை அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கிரீன் கார்டு கட்டாயம் என்பதால் இதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஆண்டு தோறும் 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கிரீன் கார்டு இந்தியர்களால் பல்வேறு காரணங்களால் எளிதில் பெற முடிவதில்லை.

இதனால், இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிரீன் கார்டு பெறுவது தொடர்பாக அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா இயற்றப்பட உள்ளது.

இதுகுறித்து நியூயார்க் குடியேற்ற சட்ட நிறுவனத்தின் தலைவர் சிரஸ் டி மேத்தா கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற்றம் செய்ய இந்தியர்களுக்காக புதிய சட்ட மசோதா விரைவில் இயற்றப்பட இருக்கிறது. அதில் முக்கிய அம்சமாக, கிரீன் கார்டு பெறுவதில் நிலுவையில் உள்ள இந்திய விண்ணப்பத்தாரர்கள் ரூ.3.80 லட்சம் கூடுதலாக செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக் கொள்ள முடியும். எச்1பி விசா வைத்திருப்பவர்களும் தங்களின் வயது வரம்பு முடியும் தருவாயில் இருந்தாலும், அல்லது முடிந்து இருந்தாலும் இந்த புதிய மசோதாவின் கீழ் கூடுதலாக பணம் செலுத்தி கிரீன் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இது ஒரு அருமையான மசோதா.

இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி MAALAIMALAR)