செளதி அரேபியாவில் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒட்டக சிற்பங்கள் – என்ன சொல்கிறது புதிய ஆய்வு?

செளதி அரேபியாவில், பாறைகளின் மீது தொடர்ச்சியாக செதுக்கப்பட்டுள்ள ஒட்டக சிற்பங்கள் உலகிலேயே மிகவும் பழமையான விலங்கின சிற்பங்களாக இருக்கலாம் என்று ஆய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.

2018ஆம் ஆண்டு இந்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது இது சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டு இருந்தனர்.

இந்த ஒட்டக சிற்பங்கள், ஜோர்டனில் இருக்கும் பிரபலமான பழங்கால நகரமான பெட்ராவில் இருக்கும் சிற்பங்களை ஒத்து இருப்பதாகக் கூறினர்.

ஆனால் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இந்த ஒட்டக சிற்பங்கள் 7,000 – 8,000 ஆண்டு பழமையானவை என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக பழங்கால சிற்பங்களை ஆராய்வது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் சவாலானவை. ஒரு குகை ஓவியங்களைப் போல இதில் எந்த ஒரு ஆர்கானிக் மாதிரிகளையும் எடுத்து பரிசோதனை செய்ய முடியாது. இந்த அளவுக்கு மிகப் பெரிய சிற்பங்கள் இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அரிதானவை.

இந்த சிற்பங்களை ஆய்வு செய்து தங்கள் கண்டுபிடிப்புகளை ‘ஜர்னல் ஆஃப் ஆர்கியாலஜிகல் சயின்ஸ்’என்கிற சஞ்சிகையில் பிரசுரித்தவர்கள், இந்த ஒட்டக சிற்பங்களில் ஏற்பட்டிருக்கும் தேய்மான முறைகள் மற்றும் பாங்குகளையும், அதன் மீது இருக்கும் கருவிகளின் குறிகளையும், அப்பகுதியில் இருந்த விலங்கினங்களின் எலும்பு எச்சங்களையும் பயன்படுத்தி, அதன் பழமையை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

5,000 ஆண்டு பழமையான ஸ்டோன்ஹென்ச் அல்லது 4,500 ஆண்டுகள் பழமையான கீசா ப்ரமீட்களை விட இந்த ஒட்டக சிற்பங்கள் பழமையானவை. ஒட்டகங்களை பழக்கப்படுத்தி வளர்க்கத் தொடங்கிய காலத்துக்கு முந்தையது. அப்பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஒட்டகங்கள் பெரிதும் உதவின.

இந்த ஒட்டக சிற்பங்கள் உருவாக்கப்படும் போது, செளதி அரேபியா பசுமையான புல்தரைகளோடும் ஆங்காங்கே ஏரிகளோடும் இருந்தன. இன்று காணப்படுவது போல பாலைவனங்களாக இல்லை.

ஆனால் இங்கு ஒட்டக சிற்பங்கள் ஏன் உருவாக்கப்பட்டன என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் நாடோடி பழங்குடி மக்கள் சந்திப்பதற்கு ஓரிடத்தை வழங்கி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன், இப்படிப்பட்ட ஒட்டக சிற்பங்களை உருவாக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பல ஒட்டக சிற்பங்கள் தரையில் இருந்து உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இன்று வீடு கட்டும் போது பயன்படுத்தப்படும் சாரங்களைப் போல அன்று அமைத்து சிற்பங்களை செதுக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

(நன்றி BBC TAMIL)