ஆப்கன் மத்திய வங்கியில் குவியும் பணம்!

ஆப்கானின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கம், அந்நாட்டின் மத்திய வங்கிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த பிப்ரவரி மாதம் தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, ஆப்கனை கைபற்றியுள்ள தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர்.

ஆப்கனின் செயல் பிரதமராக முல்லா அகுந்த் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல நாங்கள் இப்போது இல்லை என தலிபான்கள் விளக்கம் கொடுத்திருந்தாலும், பெண்களுக்கான சுதந்திரம் அங்கு இல்லை என்பதே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஆப்கனில் இருந்து அந்த நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் வெளியேறினர். பல்வேறு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை முடித்துக் கொண்டன. ஆப்கனை பல்வேறு உலக நாடுகள் தனிமைப்படுத்தியதால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்கள் உணவுக்காக கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். சீனாவிலிருந்து பெரிய முதலீடுகளையும், அமெரிக்காவிடம் இருந்து உதவிக்கரத்தையும் தலிபான்கள் நீட்டியுள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கம், அந்நாட்டின் மத்திய வங்கிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 1 கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களில் அந்த தொகை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, ஹாஜி இத்ரிஸ் என்பவரை, மத்திய வங்கியின் இடைக்கால தலைவராக தலிபான்கள் நியமித்துள்ளனர். இவர் மீது தலிபான்களுக்கும், அல்-கொய்தாவுக்கும் இடையில் பணப் பரிவர்த்தனை செய்தவர் என்று முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே குற்றம் சாட்டி உள்ளார். அத்துடன், இவர் மீது பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

(நன்றி TAMIL SAMAYAM)